ஊடகவியலாளர் மீதான தாக்குதல்; கைதான ஐவருக்கும் விளக்கமறியல் | தினகரன்


ஊடகவியலாளர் மீதான தாக்குதல்; கைதான ஐவருக்கும் விளக்கமறியல்

செயற்கை கள் உற்பத்தி தொடர்பான செய்தியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் துஷித்த குமார டி சில்வா மற்றும் அவரது மனைவியைத் தாக்கி அவர்களின் வீட்டை சேதப்படுத்திய ஐந்து சந்தேக நபர்களுக்கும் களுத்துறை நீதிமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதித்துள்ளது. 

களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்படி ஐந்து சந்தேக நபர்களையும் நேற்று (10) கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் அவர்களுக்கு விளக்கமறியல் விதித்தார். 

பெலியத்த, நேபொட, நாராஹேன்பிட்ட மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே பொலிஸார் நேற்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  

கடந்த 06ஆம் திகதி மாலை ஊடகவியலாளர் துஷித்த குமார டி சில்வா தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அளுத்கம தர்கா நகரிலிருந்து வெல்பிட்டிய பின்ஹேன பகுதியிலுள்ள தனது வீட்டை நோக்கிச் சென்றுள்ளார். இதன்போது வீட்டுக்கு அருகில் வைத்து அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்த ஐவர் கொண்ட கும்பல், ஊடகவியலாளரையும் அவரது மனைவியையும் தாக்கினர். அத்துடன் அவர்களுடைய வீட்டையும் சேதப்படுத்தினர்.  

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளரும் அவரது மனைவியும் அளுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக ஊடகவியலாளர் நாகொட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லக்ஷ்மி பரசுராமன்  


Add new comment

Or log in with...