கிராமியத்தின் பிரதி பெயர் தெரியாமல் ஒரு பறவை | தினகரன்


கிராமியத்தின் பிரதி பெயர் தெரியாமல் ஒரு பறவை

இலக்கியம் எப்பொழுதும் நேர்மையானதாக இருக்க வேண்டும், அதே போல இலக்கியவாதிகளும் நேர்மையானவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும், இவ்விரண்டு விடயங்களும் ஒன்றாக செயற்படுகின்ற போதுதான் அது சமூகப்படைப்பாக உணரப்படும் என்பதினை கவனத்தில் கொள்ளல் மிக அவசியமாகும். 

வண்ணதாசன் நவீன தமிழ் சிறுகதை உலகின் மறுதலிக்க முடியாத ஆளுமை. சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் எனும் புனைப் பெயரில் சிறுகதைகளையும் எழுதிவந்தவர். சுவாரஷ்யமான தன்னுடைய படைப்புக்களின் மூலம் தமிழ்ச் சூழலின் தனக்கான பரப்பினை மிக விசாலாமாக விரித்துக் கொண்டவர். கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது, சில இறகுகள் சில பறவைகள், ஒரு சிறு இசை போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும். சின்னு முதல் சின்னு வரை எனும் புதினத்தையும். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு போன்ற கவிதை தொகுதிகளையும். அகம் புறம் எனும் கட்டுரைகளையும். வண்ணதாசன் கடிதங்கள் என விரிந்த செயற்பாட்டுத் தளத்தின் மிக முக்கியமான படைப்பாளியே வண்ணதாசன். தீபம் இதழில் தன்னுடைய எழுத்துப் பயணத்தினை ஆரம்பித்த வண்ணதாசன் இற்றை வரைக்கும் காத்திரமான படைப்பிலக்கிய சுவையின் ருசி மங்காதவர். இவருடைய தந்தையான சி.சிவங்கரன் சாகித்திய அகெடமி விருது பெற்ற ஓர் அற்புதமான படைப்பாளி. பல்கலைக்கழகங்களில் பாடமாக்கப்பட்டுள்ள வண்ணதாசனின் சிறுகதைகள் காலத்தினை கேள்விக்குட்படுத்தும் படைப்புகளாகும். 

இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு விருதுகளினை தனதாக்கிக் கொண்ட வண்ணதாசன் சிறுகதைகளின் உலகினூடே மாற்றியல் வெளியினை படம்பிடித்துக் காட்டியவர். விஷ்ணுபுரம் விருது, சுஜாதா விருது, கலைமாணி விருது, சென்ற ஆண்டிற்கான சாகித்திய அகெடமி விருது இவரின் சிறு இசை தொகுதிக்கு கிடைத்திருக்கிறது. ஒரு படைப்பாளனுக்கான பெருத்த பங்கினை வண்ணதாசனின் எழுத்துக்கள் மிக லாவகமாகவே உள்வாங்கின. விருதுகளின் சொந்தக்காரன் என்றே வண்ணதாசன் அழைக்கப்படுகிறார். தந்தையும் மகனும் பெற்றிருக்கின்ற சாகித்திய அகெடமி விருது இதுவே முதல் முறையாகவும் நிகழ்ந்திருக்கிறது. இலக்கியப் பரப்பினுள் சிறுகதைகள் மிகுந்த தாக்கத்தினை கொண்டுவருபவை. அவற்றிக் மீதான உரையாடல்கள் பெரும் பரப்பினை தோற்றுவிக்கக் கூடியவை. சிறுகதைகளின் நுட்பங்களினூடே அதனுடைய அழகியலினை தன்னுடைய படைப்புக்களில் வடித்த வண்ணதாசனின் எழுத்துலகம் ரசனைகளின் கூடாரம்.  


Add new comment

Or log in with...