குகையில் எஞ்சி இருக்கும் ஐவரை மீட்பதற்கு கடைசி கட்ட நடவடிக்கை | தினகரன்

குகையில் எஞ்சி இருக்கும் ஐவரை மீட்பதற்கு கடைசி கட்ட நடவடிக்கை

தாய்லாந்தின் சிக்கலான குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட முதல் எட்டு சிறுவர்களும் நல்ல உடநிலையுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள ஐந்து பேரையும் காப்பாற்றும் மூன்றாவது மற்றும் கடைசிக்கட்ட மீட்பு நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.

“தற்போதைய தருணத்தில் பயப்படத் தேவையில்லை அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று தாய்லாந்து சுகாதார அமைச்சின் நிரந்த செயலாளர் ஜேசதா சொக்டம்ரொங்சுக் குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர்களில் இரு சிறுவர்களுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதோடு முதலில் வெளியே அழைத்துவரப்பட்ட நான்கு சிறுவர்களும் தமது மருத்துவ படுக்கையில் இருந்து சாதாரணமாக இயங்கி வருகின்றனர்.

“இந்த சிறுவர்கள் கால்பந்து ஆடுபவர்கள் என்பதால் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக உள்ளனர்” என்று அவர்கள் நீண்டகாலம் உயிர்தப்பியதற்கு காரணம் கேட்டபோது ஜேசதா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் பசியை உணர்பவர்களாக இருப்பதாகவும் அவர்களுக்கு மென்மையான, இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவுகளை கொடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். எனினும் சில சிறுவர்கள் உண்பதற்கு சொக்கலெட் பூசிய பாணை கேட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

நோய் தொற்று ஆபத்து காரணமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் நோய்த் தொற்று உள்ளதா என்று செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளி வந்த பின்னர் நோய் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவர்கள் குடும்பத்தை சந்திக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

மியன்மார் எல்லையில் இருக்கும் தாம் லுவாங் குகையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மேலும் நான்கு சிறுவர்கள் வெளியே அழைத்து வரப்பட்டு அவர்கள் முதலுதவி கட்டில்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்படி கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடம்பெற்ற இரண்டு கட்ட மீட்பு நடவடிக்கைகளில் எட்டு சிறுவர்கள் வெள்ள நீரால் மூழ்கி இருக்கும் குறுகலாக குகையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இறுதிக் கட்ட மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கபட்டது. எனினும் முந்தைய இரண்டு கட்டங்களை விடவும் இம்முறை மேலதிகமாக ஒருவரை வெளியே அழைத்து வரவேண்டி இருப்பதால் இது அதிக சவால் கொண்டதாக இருக்கும் என இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கான தலைவர் நரொங்சாக் ஒசொடகோன் குறிப்பிட்டார்.

எனினும் திங்கட்கிழமை இரண்டாவது கட்ட மீட்பில் போதிய அனுபவம் பெற்ற சுழியோடிகள் இரண்டு மணி நேரம் முன்கூட்டியே அந்த சிறுவர்களை மீட்டு வந்தனர். எனினும் பருவமழை தொடர்வதால் நீரில் மூழ்கி இருக்கும் சுண்ணாம்புக் குகை ஊடே ஊடுருவி செல்வதில் சிரமம் இருந்து வருகிறது.

“இன்று அதிக வேகமாக அல்லது நேற்றை வேகத்தில் செயற்படுத்த எதிர்பார்த்திருக்கிறோம்” என்று நரொங்சாக் தெரிவித்தார்.

குகை வாயிலில் இருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் சிக்கி இருக்கும் இந்த சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர்களை மீட்டு வர இருண்ட குறுகலான பதையில் தாய்லாந்து கடற்படை மற்றும் வெளிநாட்டு சுழியோடிகள் 9 மணி நேரம் பயணிக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் எஞ்சியவர்களை மீட்டுவருவதாற்காக உள்ளுர் நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் 19 முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர்.

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23ஆம் திகதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இதனிடையே தாய்லந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து பதினோராவது சிறுவன் மீட்கப்பட்டதாக இராணுவ அதிகாரி நேற்று தெரிவித்தார்.

இன்னும் 2 பேரை மீட்புப் பணியாளர்கள் குகையிலிருந்து வெளியேற்றவேண்டி இருந்தது. பத்தாவது, பதினோராவது சிறுவர்களைப் படுக்கையில் கிடத்தி வைத்து மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர்.

தாய்லாந்து நேரப்படி நேற்று மாலை ஒன்பதாவது சிறுவன் மீட்கப்பட்டான். குகையில் எஞ்சியுள்ளோர் நேற்று இரவுக்குள் மீட்கப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.


Add new comment

Or log in with...