3rd Test: மழை குறுக்கீடு; இலங்கை 105 ஓட்டங்கள் பின்னிலை | தினகரன்

3rd Test: மழை குறுக்கீடு; இலங்கை 105 ஓட்டங்கள் பின்னிலை

இரு நாளிலும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

மழையால் பாதிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இருநாள் ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

பிரிட்ஜ்டவுனில் கடந்த சனிக்கிழமை (23) ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலே இந்த டெஸ்டில் இலங்கை அணியின் தலைவராக செயற்படுகிறார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை லக்மால் பதம்பார்க்க அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி 53 ஓட்டங்களுக்கே முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் 6ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விக்கெட் காப்பாளர் டோரிச் மற்றும் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை களத்தில் நின்று மேற்கிந்திய தீவுகளை நெருக்கடியில் இருந்து மீட்டனர். மழை குறுக்கிட்டதால் முதல் நாள் 46.3 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் டோரிச் மற்றும் ஹோல்ட்ர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

டோரிச் 60 ஓட்டங்களுடனும் ஹோல்டர் 33 ஓட்டங்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்திற்காக களமிறங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 204 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது தடுமாறியது. அதற்கமைய, 85 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்தது. மழையின் குறுக்கீடு காரணமாக போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுக்கு கொண்டு வரும்போது, இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து  99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 29 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நேர முடிவில் ரொஷேன் சில்வா 03 ஓட்டங்களுடனும், நிரோஷன் திக்வெல்ல 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்க இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

 


Add new comment

Or log in with...