Monday, June 17, 2024
Home » அனர்த்தங்கள் விடயத்தில் அவதானம் அவசியம்!

அனர்த்தங்கள் விடயத்தில் அவதானம் அவசியம்!

by mahesh
May 25, 2024 8:21 am 0 comment

மழை, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது பொதுமக்கள் மிகுந்த அவதானம் பேணுவது அவசியமாகின்றது. ஏனெனில் இயற்கை அனர்த்தங்களின் போது உடைமை அழிவுகள் மாத்திரமன்றி, உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்,எமது நாட்டைப் பொறுத்தவரை இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகள் குறைவென்றுதான் கூற வேண்டும். அதுமாத்திரமன்றி, எரிமலை போன்ற ஆபத்தான அனர்த்தங்கள் இலங்கையில் ஏற்படுவதில்லை. எமது நாட்டை மிகமோசமாகத் தாக்கிய இயற்கை அனர்த்தமென்றால் அது சுனாமி அனர்த்தமேயாகும். சுனாமி அனர்த்தமானது ஓரளவு முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடியதாகும். அதேபோன்று மழை, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களும் முன்கூட்டியே எதிர்வு கூறக் கூடியவையாகும்.

இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலையை எடுத்துக் கொண்டால், மலையகத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மலையகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால், காலப்போக்கில் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து ஏற்படுமென்பதை மறுப்பதற்கில்லை.

தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போது நிலம் படிப்படியாக இலகுத்தன்மை அடைகின்றது. காலப்போக்கில் உயரத்தில் இருக்கின்ற மண்திட்டு ஒன்று திடீரென்று கீழே சரிந்து விழுந்து பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது. வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்படுகின்றன.

இலங்கையில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களில் மண்சரிவு அனர்த்தமே பாரதூரமானதாகும். மழை, வெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வுகூறப்படுவதால், மக்கள் முன்னதாகவே ஓரளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஆனால் மண்சரிவு அனர்த்தமானது அவ்வாறானதல்ல. ஓரிரு செக்கன்களுக்குள்ளேயே ஏற்பட்டு பாரிய சேதங்களை உண்டாக்கி விடுகின்றது.

மழையானது தொடர்ச்சியாக பொழியும்போது மண்சரிவு ஏற்படும் அபாயம் எழுகின்றது. அதாவது உயரமான பகுதிகளில் மழை பொழியும்போது மழைநீரானது உட்புகுந்து மண்படைகளை இலேசானதாக செல்வதன் மூலம் மண்ணின் பிடிமானம் குறைவடைகின்றது. இதன் காரணமாக மண் படையமைப்பு தனது இருப்பை விட்டு இடம்பெயரும் போது மண்சரிவு ஏற்படும்.

மண்சரிவுகளில் பெரும்பாலானவை சாய்வுகளை கொண்ட உயர்நிலை பிரதேசங்களில் ஏற்படுகின்றன. சாய்வுகளில் குத்துச் சாய்வுகளில் மிக விரைவாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடையான பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து குறைவாகக் காணப்படும்.

மனிதன் தனது பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நிலத்தினை பயன்படுத்துகின்றான். குறிப்பாக விவசாய நடவடிக்கைகள், குடியிருப்புகளை அமைத்தல் போன்றவற்றினால் நிலத்தினை மாற்றி அமைகின்றான். இதன் காரணமாக இயற்கை தன்மையினை மாற்றும்போது மண்சரிவு தூண்டுவிக்கப்படுகின்றது.

இன்று உலகில் அபிவிருத்தி, நகராக்கம் போன்ற செயற்பாடுகளினால் கட்டடங்களை நிர்மாணிக்கவும் கற்களைப் பெறவும் நிலத்தைச் சமப்படுத்தவும் மலைகள் உடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாறைகள் அசைவுக்கு உட்பட்டும் மண்சரிவு ஏற்படுகின்றது.

இலங்கையின் இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுகின்றது. இரத்தினக்கல் பெறும் பொருட்டு நிலம் ஆழமாகத் தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணின் படையமைப்பு குலைக்கப்படுவதுடன் அயற்பகுதியும் சேர்ந்து நிலச்சரிவுக்கு உள்ளாகின்றது.

முறையற்ற பயிர்ச்செய்கை நடவடிக்கைகளாலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படுகின்றது. அதாவது உயர்பிரதேசங்களிலும் சாய்வான பகுதிகளிலும் பயிர்ச்செய்கை திட்டமிடப்படாதவாறு நடைபெறுவதன் மூலம் மண்பகுதிகள் அசைவுக்கு உட்படுகின்றன. இதுவும் மண்சரிவுக்கான காரணமாகின்றது.

சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக இன்று அநேகமான இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு உயர்வான மலைப்பிரதேசங்களிலும், சாய்வான பகுதிகளிலும் மனித தேவைக்கு கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக முறையற்ற நிர்மாணிப்பின் போது மண்சரிவு ஏற்படுகின்றது.

மலையகத்தில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளமை நினைவிருக்கலாம். அந்த அனர்த்தங்களில் பலர் பலியாகியிருக்கின்றனர். அன்றைய துயர அனுபவங்களை கருத்திற் கொண்டு மலையத்தில் வசிப்போர் இன்றைய காலத்தில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இது ஒருபுறமிருக்க, நாட்டில் நிலவும் மழை காரணமாக இரண்டு நாட்களில் கொழும்பு நகர எல்லையில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. அதன் காரணமாக கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை கொழும்பு நகர எல்லையில் ஆபத்தான நிலையில் உள்ள சுமார் 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை நாட்டின் பல பிரதேசங்களில் நிலவுகின்ற இன்றைய காலத்தில் அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT