Monday, June 17, 2024
Home » டெங்கு தீவிரமடைவதால் மிகுந்த அவதானம் அவசியம்

டெங்கு தீவிரமடைவதால் மிகுந்த அவதானம் அவசியம்

by mahesh
May 22, 2024 6:00 am 0 comment

நாட்டில் கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகிறது. அதன் விளைவாக டெங்கு வரைஸ் நோய் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பமாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் பல பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் பரவலாக அவதானிக்கப்படுவது இதற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக நாட்டில் மழையுடன் சேர்த்து டெங்கு​ வைரஸ் நோய் தீவிரமடையக் கூடியதாக உள்ளது. டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் காரணியாக விளங்கும் நுளம்புகள் பெருக்கமடைவதே இதற்கு அடிப்படைக் காரணியாக விளங்குகின்றது.

ஆனால் டெங்கு வைரஸானது சுயமாகப் பரவக்கூடியதல்ல. அதன் பரவுதலுக்கு காவி மிகவும் அவசியமானது. அதுவும் எல்லா உயிரினங்களும் காவியாக செயற்பட முடியாது. மாறாக நுளம்பினத்தில் உள்ள ஈடிஸ் எஜிப்டைய் என்ற இன நுளம்புகள் ஊடாக மாத்திரமே இவ்வைரஸ் பரவும் பண்பைக் கொண்டிக்கிறது. நுளம்பினத்தில் உள்ள வேறு இனங்கள் இவ்வைரஸுக்கு காவியாக செயற்படவும் முடியாது.

தற்போதைய சூழலில் டெங்கு வைரஸுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பில் கவனயீனமாகவோ அசிரத்தையோடோ நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் சுற்றுச்சூழலில் பெருக்கமடைந்து காணப்படுவதில் பெரும்பாலானவை ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகளாகவே இருக்கும். இவ்வின நுளம்புகள் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கி இருக்கும் இடங்களிலேயே முட்டையிட்டு பல்கிப் பெருகும்.

இந்நிலையில் தற்போதைய மழைக் காலநிலையுடன் சேர்த்து மேல் மாகாணம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் இவ் வைரஸ் நோய் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது.

அந்த வகையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த முன்னேற்ற மீளாய்வு கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சமயம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க, மழைக் காலநிலையுடன் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியதோடு, எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னெடுக்கவும் ஆலோசனை கூறியுள்ளார். கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களையும் பெற்றோரையும் தெளிவுபடுத்தும் வகையில் இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

அரச நிறுவனங்கள், மதத்தலங்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் போன்றவற்றில் டெங்கு பரவும் அபாயத்தை குறிப்பாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இந் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தவென கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் டெங்கு வைரஸ் நோய் மீண்டும் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தலைமையிலான இக்கூட்டம் நல்ல எடுத்துக்காட்டாகும்.

அதனால் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்புக்கு ஒவ்வொரு பிரஜையும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். குறிப்பாக டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு பல்கிப்பெருகக்கூடிய மழைநீர் தேங்கும் கைவிடப்பட்ட சிரட்டை, யோகட் கப்கள், மட்பாடண்டங்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுப் பொருட்களை முறையாகவும் சீராகவும் அப்புறப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக சுற்றாடலை நீர் தேங்க முடியாதபடி உலர்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது டெங்கு வைரஸ் காவி இன நுளம்புகள் பெருக வாய்ப்பு இருக்காது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT