Monday, May 20, 2024
Home » பேருவளை தந்த தலைசிறந்த அரசியல்வாதி பாக்கீர் மாக்கார்

பேருவளை தந்த தலைசிறந்த அரசியல்வாதி பாக்கீர் மாக்கார்

நாளை மறுதினம் அன்னாரின் 107 ஆவது பிறந்ததினம்

by Gayan Abeykoon
May 10, 2024 9:42 am 0 comment

‘தோன்றின் புகழுடன் தோன்றுக’ என்பதற்கொப்ப வாழ்ந்து காட்டியவர் முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மாக்கார் அவர்கள் ஆவார். பேருவளை, மருதானை கிராமத்தில் பாரம்பரிய முறையில் நோயாளிகளுக்கு வைத்திய சேவையாற்றும் ஹக்கீம் குடும்பத்தில் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அப்துல் பாக்கீர் மாக்கார் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை தாம் பிறந்த கிராமத்துப் பாடசாலையில் அவர் பெற்றுக் கொண்டார். பின்பு கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் உயர்தரக் கல்வி கற்றார். அதே ஸாஹிரா கல்லூரியில் ஆசிரியராக தனது சேவையைத் தொடங்கினார். அப்போது ஸாஹிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றியவர் டி. பி. ஜாயா அவர்கள். அவரது மாணவனாகவும், அவரின் நேரடி வழிகாட்டலில் சக ஆசிரியனாகவும் இருக்கும் பாக்கியம் பாக்கீர் மாக்கார் அவர்களுக்குக் கிடைக்கிறது.

முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அரசியல், கல்வி, பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக பாக்கீர் மாக்கார் விளங்கினார்.

தனது அறிவையும், செல்வாக்கையும், செல்வத்தையும், அவசியமானபோது அரசியல் அதிகாரத்தையும் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார்.

சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிய இளைஞர் பாக்கீர் மாக்கார், ஊரில் இளைஞர்களை ஒன்று திரட்டி சங்கங்கள் உருவாக்கி மக்கள்நலப் பணிகளை செய்து வந்தார். அதில் கல்வி சார்ந்த பணிகள் முதலிடம் பெற்றன.

ஊரவரின் வாசிப்புத்தேவைக்கு திண்ணை நூலகங்களை ஏற்பாடு செய்தார். அதில் அக்கால மாணவ, மாணவியர் பயனடைந்தனர். சமயம் சார்ந்த பணிகளும் இடம்பெற தவறவில்லை.

இளைஞர் பாக்கீர் மாக்காரின் சமூக சேவை ஆர்வத்தை கண்ட மருதானை கிராம மக்கள், அடுத்த நகரசபைத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்தினர். அவர் மருதானை தொகுதியின் அங்கத்தவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டு பாக்கீர் மாக்கார் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அதுதான் பாக்கீர் மாக்கார் அவர்கள் பேருவளை நகரசபை தலைவரானதும், களுத்துறை நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்ததுமாகும்.

பாக்கீர் மாக்காரின் புதிய பதவியும், தகுதியும் ஊரின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பட ஆரம்பித்தன. மக்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த, நகரின் நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. நகரசபை எல்லைக்குள் மின்சார வசதிகள் விரிவாக்கப்பட்டன.

பாக்கீர் மாக்கார் அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றார். 1960 இல் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர், 1977 இல் பிரதி சபாநாயகர், 1978 இல் சபாநாயகர், 1983 இல் அமைச்சரவை அமைச்சர், 1988 இல் ஆளுநர் என்றவாறு பதவிகளை வகித்தார்.

அவர் சபாநாயகராக பதவி வகித்த காலத்தில் தர்ஹா நகர் ஸாஹிரா கல்லூரி, அளுத்கம்வீதிய முஸ்லிம் பெண்கள் கல்லூரி, அல்ஹுமைஸரா மகாவித்தியாலயம், அல்பாஸியத்துல் நஸ்ரியா பெண்கள் பாடசாலை, ஐ.எல்.எம்.சம்சுதீன் பாடசாலை, அல் ஹஸனியா பாடசாலை ஆகியன பல வளங்களை பெற்றுக் கொண்டன.

சபாநாயகராக இருந்த போது மன்னார் பகுதியில் பாடசாலைக்கான கட்டடப் பணிக்காக தனது சொந்தப் பணத்தை வழங்கினார்.

1981 ஆம் ஆண்டு களுத்துறை கல்வித் திணைக்களம் தவணைப் பரீட்சைக்கு சிங்கள மொழி பாடசாலைகளுக்கு பொது வினாத்தாள் தயாரித்து வழங்கியது. ஆனால், நிதி பற்றாக்குறை, வளவாளர் பற்றாக்குறை காரணமாக தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு தவணை வினாப்பத்திரங்கள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியாக தலையிட்ட பாக்கீர் மாக்கார், தனது சொந்த செலவில் வளவாளர்களைக் கொண்டு வினாப்பத்திரங்கள் தயாரித்து வலய தமிழ்மொழி பாடசாலைகளுக்கு வழங்கி வைத்தார்.

அவருடைய தீர்க்கதரிசனமான பார்வை, சிறந்த அணுகுமுறைகள், பிரச்சினை தீர்க்கும் வழிமுறைகள் பேருவளை தொகுதியின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்புகளைச் செய்தன. எதிர்கால பரம்பரையினர் கல்வியில், சமய விழுமியங்களில், பொருளாதார வளர்ச்சியில் மிகச் சிறந்தவர்களாக மிளிர வேண்டும் என்று இறுதிவரை போராடிய பாக்கீர் மாக்கார் அவர்கள் 1993.05.12 ஆம் திகதி காலமானார். அவர் மறைந்தாலும் அவரின் சேவைகள், கல்வி வளர்ச்சியில் அவரின் பங்களிப்புகள் எக்காலத்திலும் மறந்துவிடக் கூடியதல்ல.

பேருவளை

பியெம் ஜாபிர்  

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT