Home » பேருவளையில் திண்ம கழிவகற்றல் ஒழுங்குபடுத்தப்படுவது அவசியம்

பேருவளையில் திண்ம கழிவகற்றல் ஒழுங்குபடுத்தப்படுவது அவசியம்

பிரதமர் உடனடி கவனம் செலுத்த வேண்டும்---

by Gayan Abeykoon
May 9, 2024 9:34 am 0 comment

பேருவளை நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில், உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நேற்று (08) பாராளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும், நாட்டின் பிரதமர் என்ற வகையிலும், பேருவளை நகர சபைக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் குப்பை மேடு மற்றும் அதனோடிணைந்த மிகவும் சிக்கலான சூழ்நிலைக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கு பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

“பேருவளை நகர சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பல வருட காலமாக பேருவளை, மருதானை, வத்திமிராஜபுர கிராமத்திலுள்ள காணியில் கொட்டப்பட்டு வருகின்றன . இதனால், அப்பகுதியில் வாழும்   400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இக்கிராமத்தை அண்மித்துள்ள மொரகல்ல சுற்றுலாப் பகுதியிலும் ஈக்கள்  பெருக்கெடுத்து துர்நாற்றம் வீசுகிறது.

கடலுக்கு செல்லும் கால்வாய் அடைபட்டுள்ள தால், சிறிய மழை பெய்தாலும் வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கின்றன.

ஈக்கள் பெருகுவதால் வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவி வருகின்றன. நுளம்புகள் பெருகி டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. தோல் நோய்கள் பொதுவாக காணப்படுகின்றன. மற்றும் இந்த கிராமத்தில் வசிப்பது நுரையீரல் நோய்கள் உட்பட பல நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.”  பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இந்த கழிவுகள் அகற்றப்படும் விதத்தினால் இன்று பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளது.

மீதொட்டமுல்லை குப்பை மேட்டில் நடந்ததைப் போன்று பாரிய உயிர்ச் சேதங்களுக்குப் பின்னர் பொறுப்பானவர்களின் கண்கள் திறக்கப் போகின்றனவா?

இவ்விவகாரத்தில் பிரதமரை நேரடியாக குற்றம் சாட்டுமளவுக்கு  நியாயமற்றவனாக நடந்து கொள்ளமாட்டேன். சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அனைத்துத் தரப்பினருக்கும் இது தொடர்பில் பொறுப்புள்ளது.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்றம், சுகாதாரத் திணைக்களம், சுற்றாடலுக்குப் பொறுப்பான தரப்பினர் என அனைவருக்கும் இது தொடர்பில் பொறுப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT