Sunday, May 19, 2024
Home » ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் செயலிழப்பு குறித்து கவலை

‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் செயலிழப்பு குறித்து கவலை

by mahesh
May 5, 2024 3:16 pm 0 comment

கொவிட்–19 வைரஸ் பரவலின்போது, அதிக அளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு (ஆன்டிபயாடிக்) மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் அவற்றின் திறன் குறைந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பக்டீரியா, கிருமிகள், பூஞ்சைக் காளான், ஒட்டுண்ணிகள் போன்றவை ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளுக்கு இனி கட்டுப்படமாட்டாது என்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சத்தியை அந்த நுண்ணுயிரிகள் வளர்த்துக்கொண்டதால் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் திறன் குன்றிப் போனதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது சிரமமாகியுள்ளது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள நேரிட்ட கொவிட்–19 நோயாளிகளில் 8 வீதத்தினருக்கு மட்டுமே பக்டீரியா தொற்றுக்கான ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைத் தரவேண்டியிருந்தது. ஆனால் சுமார் 75 வீதத்தினருக்கு அந்த மருந்துகள் தரப்பட்டன. ஒருவேளை அந்த மருந்து உதவக்கூடும் என்று கருதி அவை தரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

பிலிப்பைன்ஸ் உட்பட மேற்கு பசிபிக் வட்டார நாடுகளில் 33 வீதமான நோயாளிகளுக்கு ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் தரப்பட்டன. கிழக்கு மத்தியதரைக்கடல், ஆபிரிக்க வட்டாரங்களில் அந்த எண்ணிக்கை 83 வீதமாக உள்ளது.

‘ஒரு நோயாளிக்கு ‘ஆன்டிபயாடிக்’ மருந்து தரவேண்டிய சூழல் ஏற்பட்டால், வழக்கமாக அதன் பக்கவிளைவுகளைவிட அதனால் ஏற்படும் நன்மை அதிகமாக இருக்கும். ஆனால் தேவையின்றி இம்மருந்து தரப்பட்டால், பயனில்லை என்பதோடு நுண்ணுயிரிகள் அதற்கு எதிரான எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்ளும் அபாயமும் ஏற்படுகிறது,’ என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

நுண்ணுயிரிகள் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துக்கு எதிரான எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்ளுதல் என்பது உலகளாவிய நிலையில் பொதுச் சுகாதாரம், மேம்பாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அது குறிப்பிட்டது.

பிலிப்பைன்சில் இதனால் 15,700 பேர் உயிரிழந்ததாகவும் 2019ஆம் ஆண்டில் மொத்தம் 56,700 பேர் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சூழல் அதிகரிப்பதைத் தடுக்க, பொதுமக்கள் தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT