Friday, July 19, 2024
Home » IPL 2024 CSK vs PK: பஞ்சாப்புடன் சென்னை இன்று மீண்டும் மோதல்

IPL 2024 CSK vs PK: பஞ்சாப்புடன் சென்னை இன்று மீண்டும் மோதல்

- பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

by Prashahini
May 5, 2024 1:04 pm 0 comment

IPL 2024 கிரிக்கெட் தொடரில் இன்று(05) பிற்பகல் 3.30 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் இந்த சீசனில் 2ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த 1ஆம் திகதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அந்த ஆட்டத்தில் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்கவிடாமல் மட்டுப்படுத்தினர். சென்னை அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டுமே நம்பியிருப்பது பலவீனமாகி உள்ளது.

இவர்களில் யாரேனும் ஒருவர் ஓட்டங்கள்குவிக்கத் தவறினால் அது சீரான திறனை வெளிப்படுத்தாத மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் பாதிப்பதாக உள்ளது.

அஜிங்க்ய ரஹானே சிறப்பான தொடக்கம் கிடைத்தாலும் விரைவிலேயே ஆட்டமிழப்பது அழுத்தத்தை உருவாக்குகிறது. ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறியது வியப்பை அளித்தது. இது ஒருபுறம் இருக்க சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் காயத்தில் சிக்கியிருப்பது அணியின் பலவீனத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஆட்டத்தில் இரு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் வெளியேறினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக களமிறங்காத துஷார் தேஷ்பாண்டே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மத்தீஷா பதிரண ஆகியோர் உடற்தகுதியை அடைந்தால் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார்கள்.

இது ஒருபுறம் இருக்க முஸ்டாபிஸுர் ரஹ்மான், வங்கதேச அணியுடன் இணைந்துள்ளார். இதனால் அவர் IPL தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடமாட்டார். இதுவும் சிஎஸ்கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் முகேஷ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து பெற்றுள்ள இரு வெற்றிகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்துள்ள அந்த அணி, அதை தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

இந்த சீசனில் பஞ்சாப் அணி கணிக்க முடியாததாக திகழ்கிறது. சொந்த மைதானத்தில் ராஜஸ்தான், ஹைதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி வெளி மைதானங்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

துடுப்பாட்டத்தில் ஜானி பேர்ஸ்டோ, ரீலி ரோசோவ், ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங் ஆயோர் கடந்த சில ஆட்டங்களாக தொடர்ச்சியாக சீரான திறனை வெளிப்படுத்தி வருவது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அதேவேளையில் பந்து வீச்சில் காகிசோ ரபாடா, ஹர்ஷால் படேல், அர்ஷ்தீப் சிங், சேம் கரண் ஆகியோர் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசைக்கு ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் நெருக்கடி கொடுக்க முற்சிக்கக்கூடும்.

தரம்சாலா மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியிருந்தன. இதில் 193 ஓட்டங்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. தோனி 29 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT