Home » வெலிகம ஹப்ஸா மகளிர் கல்லூரியில் திடீர் தீ; மாணவிகளின் உடைமைகள் சேதம்

வெலிகம ஹப்ஸா மகளிர் கல்லூரியில் திடீர் தீ; மாணவிகளின் உடைமைகள் சேதம்

பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுப்பு

by Gayan Abeykoon
May 1, 2024 5:06 am 0 comment

வெலிகமையில் அமைந்துள்ள ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் விடுதியில்  மீண்டும் நேற்று முன்தினம் (29) திங்கட் கிழமை மாலை திடீரென தீப்பற்றியது.  கடந்த மார்ச் மாதமும் இவ்வாறு இக் கல்லூரியின் விடுதிப் பகுதி தீப்பற்றிக் கொண்டமை தெரிந்ததே.

தீயணைக்கும் படையினர், பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர். கடந்த திங்கட் கிழமை முழுவதும் வெலிகம பகுதியில் திருத்த வேலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் காலநிலையும் அதி உஷ்ணம் இல்லாமல் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இந் நிலையில் இவ்வாறான தீப்பிடிப்பு நிகழ்வு இடம்பெற்றமை சந்தேகத்துக்கு இடமானது என அவ்விடத்தில் குழுமியிருந்தவர்கள் பேசிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.

கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஓ. பத்ஹுர்ரஹ்மான் ( பஹ்ஜி) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,   கல்லூரியின் மூன்றாவது மாடியிலே  இவ்வாறு திடீரென தீப்பற்றிக்கொண்டது. இதனால் கட்டடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மாணவிகளின் அனைத்து உடைமைகளும் தீப்பற்றி எரிந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் இதே பகுதியே இதே நேரத்தில் தீப்பற்றிக் கொண்டது. அச் சமயம் சேதமுற்றிருந்த பகுதிகளை 60 இலட்சம் ரூபா செலவில் திருத்தம் செய்ததோடு கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை மீண்டும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையிலேயே நேற்று அதே கட்டடம் மார்ச் மாதம் தீப்பற்றிக் கொண்ட அதே நேரமே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டமையினால் இது சதிநாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் அதி தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் முடியும் வரை உறுதியாக எதுவும் கூற முடியாது என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இக்கல்லூரியில் 120 மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து கல்வி கற்பதோடு 10 ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(வெலிகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT