Home » தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரை

by Gayan Abeykoon
May 1, 2024 4:26 am 0 comment

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரது பெயர்கள் பல்கலைக்கழக பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, அப்பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.எம்.நௌபர் தெரிவித்தார்.

உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (29) பேராசிரியர் கொலின் என்.பீரிஸ் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்ட அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் கீழ் புள்ளிகள் இட்டு, அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் மூவரை பரிந்துரை செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி, மூன்றாவதாக பேராசிரியர் எப்.ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையால் விண்ணப்பம் கோரப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர்களான எப்.ஹன்ஸியா றவூப், ஏ.எம். றஸ்மி, எஸ்.எம். ஜுனைடீன், எம்.வி.எம்.இஸ்மாயில், ஏ.எம்.முஸாதிக், கலாநிதி ஏ.சி.எம்.ஹனஸ் உட்பட ஏழு பேர் விண்ணப்பித்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05ஆவது உபவேந்தராக கடந்த 2021.08.09ஆம் திகதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள இம்மூவரில் ஒருவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 06ஆவது உபவேந்தராக நியமிப்பார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT