Monday, May 6, 2024
Home » வடக்கிற்கு 50 ஆயிரம் Solar Power வீட்டுத்திட்டங்கள்

வடக்கிற்கு 50 ஆயிரம் Solar Power வீட்டுத்திட்டங்கள்

by Gayan Abeykoon
April 24, 2024 8:50 am 0 comment

வடக்கு மாகாணத்துக்கு விரைவில் 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது.

இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத்திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள், வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.

இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதேபோன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன்மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள், இதர தேவைகள் குறித்தும் தகவல்களை பெற்றுவருகின்றோம். அதற்கமைய பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் முதற் கட்டமாக 5000 பேருக்கு குடிநீர் இணைப்புக்களை வழங்கவுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் 1500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்துக்கு 2500, வவுனியா மாவட்டத்திற்கு 1500, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1500 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட மட்டத்தில் 1000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடிய நிலையை உருவாக்க முன்வர வேண்டுமென அவர் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT