Home » IPL 2024 CSK vs LSG: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?

IPL 2024 CSK vs LSG: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?

by Prashahini
April 23, 2024 7:19 pm 0 comment

IPL 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (23) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, லக்னோவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL தொடரின் நடப்பு சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தலா 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளை பதிவு செய்துள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5ஆவது இடத்திலும் உள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன.

லக்னோ ஏகானா மைதானத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தனது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் 177 ஓட்டங்களை இலக்காக சிஎஸ்கே கொடுத்த போதிலும் வலுவில்லாத பந்து வீச்சால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் ஜோடி 15 ஓவர்கள் வரை களத்தில் நின்று 134 ஓட்டங்களைவேட்டையாடி லக்னோ அணியின் வெற்றியை வசப்படுத்தியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பந்து வீச்சு வியூகங்களை மாற்றி அமைக்கக்கூடும். இது ஒருபுறம் இருக்க கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இது அணியின் ஒட்டுமொத்த ரன் குவிப்பில் தேக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிக்கட்ட ஓவர்களில் தோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்களை வேட்டையாடிதன் காரணமாக சிஎஸ்கே அணியால் 176 ஓட்டங்கள் வரை குவிக்க முடிந்திருந்தது.

எனவே தொடக்க ஓவர்களிலும், மிடில் ஓவர்களிலும் ஓட்டம் குவிப்பதில் சிஎஸ்கே கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பெரும்பாலான அணிகள் பவர் பிளே ஓவர்களில் ஓட்டம் வேட்டையாடுகின்றன. இதுவே வெற்றியை தீர்மானிக்கக்கூடிய காரணிகளாக பல்வேறு ஆட்டங்களில் அமைந்து வருகின்றன.

அந்தவகையில் இன்றைய ஆட்டத்தில் ரச்சின், ரஹானே ஜோடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக இன்றைய ஆட்டத்தில் பலம் சேர்க்கக்கூடும்.

லக்னோ அணியின் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் ஆகியோருடன் நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் கிருணல் பாண்டியா கைப்பற்றிய 2 விக்கெட்கள் முக்கிய பங்கு வகித்தன. சேப்பாக்கம் ஆடுகளம் அவரது பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடும்.

காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் களமிறங்காத வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு உள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் அணியின் பந்து வீச்சு கூடுதல் வலுப்பெறும். மோஷின்கான், யாஷ் தாக்குர், மேட் ஹென்றி ஆகியோரும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT