Home » உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் பயண முறைமையுடன் “ஸ்ரீ ராமயண டிரேல்ஸ்” ஆரம்பம்

உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் பயண முறைமையுடன் “ஸ்ரீ ராமயண டிரேல்ஸ்” ஆரம்பம்

by Prashahini
April 23, 2024 4:52 pm 0 comment

இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண டிரேல்ஸ்” (ஸ்ரீ ராமாயண பாதை) திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் நேற்று முன்தினம் (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது.

அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் மேதகு சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

“ஸ்ரீ ராமாயண பாதை” யாத்திரைத் திட்டம் மூலம் இராமாயண காவியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இலங்கை முழுவதும் உள்ள பிரதான ஒன்பது முக்கிய இடங்களை இந்து பக்தர்களின் புனித யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணத்திற்காக பிரபல்யப்படுத்தப்படும். இது ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள மில்லியன் கணக்கான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த வரலாற்று ஆலயங்களுடன் தொடர்புடைய பண்டைய ஆன்மீக நிகழ்வுகள் செயற்கை நுண்ணறிவு (AI), Augmented reality, மற்றும் மெய்நிகர் யதார்த்தம் (Virtual reality) போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேஷன் செய்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னாரிலுள்ள ஆதாம் பாலம் முதல் நுவரெலியா சீதா எலிய வரை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இடமும் இந்த யாத்திரைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் நிரஞ்சன் தேவ் ஆதித்யா மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT