Friday, May 3, 2024
Home » தேசிய பாதுகாப்புக்காகவே X முடக்கபட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு நீதிமன்றில் அறிவிப்பு

தேசிய பாதுகாப்புக்காகவே X முடக்கபட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு நீதிமன்றில் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
April 22, 2024 5:48 pm 0 comment

சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாகவே பெப்ரவரி பொதுத் தேர்தலின் போது சமூக ஊடக தளமான X பிரவேசத்தை தடைசெய்ததாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சு,இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் (IHC) அறிவித்துள்ளது.

பெப்ரவரி முதல், பாகிஸ்தானில் உள்ள பெருந்தொகையான பயனர்கள் X ஐப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக முறையிட்டிருந்தனர். ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

பெப்ரவரி 17 அன்று சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, தேர்தலில் வாக்களிப்பதில் முறைகேடு நடந்ததாக அரசாங்க அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்ட நிலையில், இதற்கு எதிராக போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையிலே சமூக ஊடக இடையூறுகள் தொடங்கின.

இந்த தடையை எதிர்த்து பத்திரிக்கையாளர் எஹ்திஷாம் அப்பாசி மனு தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் இது தொடர்பில் அறிக்கை கோரியிருந்தது. அமைச்சு சார்பில் உள்துறை செயலாளர் குர்ரம் ஆகா அறிக்கை சமர்ப்பித்தார்.

“பாகிஸ்தான் அரசாங்கத்தின் சட்டப்பூர்வ உத்தரவுகளை டுவிட்டர்/எக்ஸ் கடைப்பிடிக்கத் தவறியது மற்றும் அதன் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறியதால், கட்டுப்பாடொன்றை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என அமைச்சு அறிவித்துள்ளது.

“பாகிஸ்தானில் டுவிட்டர்/எக்ஸ் மீது தடை விதிக்கும் முடிவு தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துதல், பொது ஒழுங்கைப் பேணுதல் மற்றும் நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நலன்களுக்காக எடுக்கப்பட்டது” என்றும் அமைச்சு அறிக்கை கூறியது.

எக்ஸ் தளத்தை மூடுவதற்கு உள்துறை அமைச்சினால் உத்தரவிடப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் பின்னர் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு ஆணைக்குழு ஒப்புக்கொண்டது.

பாகிஸ்தானில் தொடர்ச்சியாக X மீதான இடையூறு , நாட்டில் ஜனநாயக சுதந்திரம் குறித்து நாடு தழுவிய கவலைகளை எழுப்பியது.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட மொத்தம் 28 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT