Friday, May 3, 2024
Home » யாழ். பல்கலைக்கழக பொன்விழா;இன்றும் நாளையும் ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழக பொன்விழா;இன்றும் நாளையும் ஆய்வு மாநாடு

by gayan
April 20, 2024 9:00 am 0 comment

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு இன்று சனிக்கிழமை (20), நாளை ஞாயிற்றுக்கிழமை (21) ஆகிய இரு தினங்களில் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் ‘யாழ்ப்பாண வளாகம்’ எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஒரு

அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, இந்த வருடத்துடன் 50ஆவது ஆண்டை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடமும் கலைப்பீடத்தின் கல்வியியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடனது ‘நாளையை வலுப்படுத்தல், கல்வியின் போக்குகளும், அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டின் காலை அமர்வு கைலாசபதி கலையரங்கிலும், மாலை அமர்வு உயர் பட்டப்படிப்புகள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர் பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமின் இணைத் தலைமையிலும் இம்மாநாடு நடைபெறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படவுள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையை கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT