Home » பாடசாலை சூழலில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை

பாடசாலை சூழலில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை

யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உடனடி தீர்மானம்

by Gayan Abeykoon
April 19, 2024 9:04 am 0 comment

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடனடியாக அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கவனத்திற்கொள்ளாமலும் செல்வதால், மாணவர்கள் விபத்துகளை எதிர்நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மேற்படி கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டி போட்டுக்கொண்டு செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால், வீதிகளில் செல்லும் மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் இது தொடர்பாக உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமெனவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

அத்துடன் இவ்வாறு அசமந்தமாக நடக்கும் தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

“அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் விபத்துகளால் மரணங்களும் உடல் ரீதியான பாதிப்புகளும் சொத்திழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆகையால் சாரதிகள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும். அவ்வாறில்லாது அசமந்தமாக நடக்கும் சாரதிகள் மீது பாராபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். வீதி போக்குவரத்தை கண்காணிக்கும் அதிகாரிகள் அதிக அக்கறையுடன் செயற்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT