Home » நிந்தவூர் வடக்கில் கடலரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் வேலைத்திட்டம்

நிந்தவூர் வடக்கில் கடலரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் வேலைத்திட்டம்

பைசால் காசிம் எம்.பி. கள விஜயம்

by Gayan Abeykoon
April 19, 2024 11:52 am 0 comment

நிந்தவூர் பிரதேசத்தின் வடக்கு கடல் எல்லையில் கடலரிப்பை தடுப்பதற்காக இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கள விஜயம் செய்து அங்குள்ள நிலைமையை அவதானித்துள்ளார்.

இக்கடலரிப்பு தொடர்பாக நிந்தவூர் கரைவலை மீன்பிடிச் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பைசால் காசிம் எம்.பி. இந்த கள விஜயத்தை அண்மையில் மேற்கொண்டார்.

நிந்தவூர் பிரதேசத்தின் வடக்கு கடல் எல்லையில் கடலரிப்பை தடுப்பதற்காக கரைக்கு குறுக்கால் கல் வீதி அமைக்கும் நிரந்தர தீர்வு திட்டத்துக்காக மேற்பார்வை செய்யும் நோக்கில் அவர் கள விஜயம் செய்தார்.

நிந்தவூர் ரவாஹா பள்ளிவாசல் முன் கடல் எல்லை தொடக்கம் காரைதீவுவரை தடுப்புச் சுவர் அமைக்கவுள்ளதுடன், எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இவ்வேலைத்திட்டத்தை தொடங்கவுள்ளதாக, பைசால் காசிம் எம்.பி. தெரிவித்தார். இதற்காக இரண்டாம் கட்டமாக 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கமைய முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இரண்டாம் கட்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கரையோர பாதுகாப்பு பேணல் திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாஸன், கிழக்கு கரையோர பாதுகாப்பு பேணல் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்கள் ஆகியோர் கள விஜயத்தில் பங்குபற்றினர்.

சம்மாந்துறை கிழக்கு தினகரன், ஒலுவில் விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT