Thursday, May 2, 2024
Home » தானே தயார் செய்த கல்லறையில் அடக்கம் செய்யப்படும் பாலித

தானே தயார் செய்த கல்லறையில் அடக்கம் செய்யப்படும் பாலித

- கடைசி ஆசையுடன் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று

by Prashahini
April 19, 2024 1:54 pm 0 comment

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன் அவரது இறுதி விருப்பப்படி அவர் தயாரித்த கல்லறையில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று (19) பிற்பகல் 2.00 மணி அளவில் அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

மின்சாரம் தாக்கியமையினால் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியை இன்று மத்துகமை, யட்டதொலவத்த பகுதியில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது கடைசி ஆசையாக தான் இறந்த பின் அதிக பணச் செலவில் மரண பெட்டியை வாங்க வேண்டாம் எனவும், அந்த பணத்தை ஊரில் உள்ள சிறார்களுக்கு புத்தகம், உணவு என்பன வழங்குமாறு குடும்பத்தாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இரேஷா ஹேமமாலி எழுதிய பாடல் ஒன்றை சில வார்த்தைகளை மாற்றி பாலித்த தெவரப்பெரும பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த பாடலை பாடியபடி தனது இறுதி ஊர்வலம் அமையவேண்டும் என்பதுதான் தெவரப்பெரும விருப்பம் எனவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதி பயணத்தில் தன்னை தூக்கிச் செல்பவர்களுக்கும் அவர் பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலித தெவரப்பெரும கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுடன் அவருக்கு வயது 64.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

பாலித தெவரப்பெரும பெரும் சமூகப் பணியை ஆற்றிய அரசியல்வாதியாக சமூகத்தில் முக்கிய இடம் பிடித்தவராவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT