Home » IPL 2024 MI vs CSK: இன்னிங்ஸை பற்ற வைத்த மதீஷ பத்திரண: மும்பையை வீழ்த்தியது சென்னை

IPL 2024 MI vs CSK: இன்னிங்ஸை பற்ற வைத்த மதீஷ பத்திரண: மும்பையை வீழ்த்தியது சென்னை

by Prashahini
April 15, 2024 9:50 am 0 comment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நடப்பு IPL சீசனின் 29ஆவது லீக் போட்டியில் 207 ஓட்டங்களை விரட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் CSK பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண சிறப்பாக பந்து வீசி இருந்தார். 4 விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு அவர் உதவினார். நடப்பு சீசனில் அவே (வெளியூர்) போட்டியில் CSK பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. ரோஹித் சர்மா இதில் சதம் விளாசி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 70 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அந்த கூட்டணியை CSK பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண பிரித்தார். இஷான் கிஷனை 8ஆவது ஓவரில் 23 ஓட்டங்களில் வெளியேற்றினார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் எல்லை கோட்டுக்கு அருகே சிறப்பாக செயல்பட்டு அவரது கேட்ச்சை எடுத்தார். அந்த ஓவர் CSK வுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

மறுமுனையில் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோஹித். அதே நேரத்தில் திலக் வர்மாவுடன் 60 ஓட்டங்கள்பார்ட்னர்ஷிப் அமைத்தார். 31 ஓட்டங்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை மதீஷ பத்திரண 14ஆவது ஓவரில் வெளியேற்றினார். 16 மற்றும் 17ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் களத்துக்கு வந்தார்.

கடைசி மூன்று ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 53 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்டை போல்ட் செய்தார் மதீஷ பத்திரண. தொடர்ந்து முகமது நபி பேட் செய்ய வந்தார். கடைசி ஓவரில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 186 ஓட்டங்கள்எடுத்தது மும்பை. ரோஹித், 63 பந்துகளில் 105 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நபி, 4 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

4 ஓவர்கள் வீசிய மதீஷ பத்திரண, 28 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். சென்னை அணிக்கு சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொடுத்திருந்தார் அவர். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது CSK.

முதல் இன்னிங்ஸ்: மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் களத்துக்கு வந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்தது CSK.

8ஆவது ஓவரில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். அவரை மும்பை அணியின் ஸ்ரேயஸ் கோபால் வெளியேற்றினார். தொடர்ந்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். ஹர்திக் வீசிய 10ஆவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை துபே விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்திருந்தது CSK. 13ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார் ருதுராஜ். ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய 14-வது ஓவரில் 22 ரன்கள், ஆகாஷ் மெத்வால் வீசிய 15ஆவது ஓவரில் 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

28 பந்துகளில் அரைசதம் கடந்தார் துபே. 40 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்த ருதுராஜ் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். ஹர்திக் வீசிய 16ஆவது ஓவரில் 1 விக்கெட் கைப்பற்றி 2 ஓட்டங்கள்மட்டுமே கொடுத்திருந்தார். 5ஆவது பேட்ஸ்மேனாக களம் கண்ட மிட்செல் இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். அடுத்த மூன்று ஓவர்களில் 29 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

14 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்த மிட்செல், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரை ஹர்திக் வீசி இருந்தார். அடுத்ததாக தோனி களம் கண்டார். அவர் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர். அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்தது. 4 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்தார் தோனி. இறுதி வரை ஆடிய துபே 38 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மும்பை அணிக்காக 3 ஓவர்கள் வீசிய முகமது நபி 19 ஓட்டங்கள்கொடுத்திருந்தார். பும்ரா, 4 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்கள் கொடுத்திருந்தார். கடைசி ஓவரில் 26 ஓட்டங்கள் கொடுத்திருந்தது மும்பை. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது CSK.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x