Monday, May 20, 2024
Home » நோன்புப் பெருநாள்

நோன்புப் பெருநாள்

by Gayan Abeykoon
April 10, 2024 8:16 pm 0 comment

பசித்திருந்து பலன்பெற்றோம் பெருநா ளென்று.
பாக்கியமே பாக்கியமே பாக்கியந்தான்.
புசிக்காத தொன்றுமட்டும் இல்லை இன்னும்
பவமொன்றுஞ் செய்யாதே மனத்தைக் காத்தோம்
நிசியுறக்கந் தவிர்த்தெழுந்து நிலையில்நின்று
நித்தியனைத் தொழுதிறைஞ்சி பாவந் தீர்க்கக்
கசிந்துருகிப் பிரார்த்தித்தோம் தலைவா எம்மைக்
கொடுநரகந் தவிர்த்துச்சுவன் தருவாயென்றே!

இரப்பவர்க்கு இல்லையென்னா(து) அருளும் வல்லோன்
ஏந்துகரம் விடுவதில்லை வெறுமையாக
சுரந்துகொண்டே இருக்குமவன் அருட்சுனையின்
செல்வத்தை அள்ளியள்ளிக் கொட்டிச் சேர்ப்பான்
பரிந்துரைகள் வேண்டாங்காண் பண்ணவன்பால்
பரிசுபெறப் படைத்தெம்மைக் காக்கும் வல்லோன்
சிரம்பணியும் அனைவருக்கும் ஒன்றேபோல
தனதருளைப் பொழிவானோர் ஐயம் இல்லை!

தக்பீரின் முழக்கமெல்லாப் பள்ளி தோறும்
செவியினிக்கப் பேரொலிக்கும் பெருநாட் காலம்
திக்கெல்லாம் காற்றள்ளிச் செல்லும் மக்கள்
செய்தபவம் அழிந்தமனத் திருப்தி கொள்வார்
சொர்க்கத்தின் வாடைநெஞ்சுள் மணக்கும் வல்லோன்
தருவனெனச் செப்பியதால் தீனோர் தீனின்
பக்கலினி நாமென்னும் ஓர்மைகொள்வார்
பற்றியநற் கருமங்கள் தொடருவாரே!

ஜின்னாஹ்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT