by mahesh
April 10, 2024 11:30 am 0 comment

ஜயவர்னபுர பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு நிலையத்துடன் புனானை பல்லைக்கழகம் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

ஜயவர்தனபுர பல்லைக்கழகத்துடன் இணைந்த பட்டப் பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (பி.ஐ.எம்.) உயர்கல்வி செயற்பாடுகளை மட்டக்களப்பு, புனானையில் அமைந்துள்ள விஞ்ஞானம் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேசப் பல்லைக்கழகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு ஏற்ப புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பட்டப் பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சேனக கெலும் கமகேவும் புனானை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவரான பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வும் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நிகழ்வில் பட்ட பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் அசங்க ரணசிங்க, விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச பல்லைக்கழகத்தின் ஸ்தாபகரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே மாதம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார் என்று பல்கலைக்கழகத்தின் தலைவரான பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இப்புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு பட்டப் பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக பட்டப் பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் உயர்கல்வி நடவடிக்கைகளும் எமது பல்கலைக்கழகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும். கிழக்கு மாகாணத்திற்கும் அருகிலுள்ள ஏனைய பிரதேசங்களுக்கும் இந்நிறுவனத்தின் கல்வித்துறை ஒத்துழைப்புக்களை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் இங்குள்ளன. தற்போது இப்பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் முழுமை அடைந்துள்ளன. ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே மாதம் இப்பல்கலைக்கழகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பார். ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய கற்கை நெறிகளையும் விரைவில் ஆரம்பிக்க கவனம் செலுத்தியுள்ளோம்.

பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான பதிவுகளும் தொடங்கியுள்ளன. வளாக பாதுகாப்பு, கல்வி வளங்கள், மாணவர் ஆதரவு சேவைகள், தொழில்நுட்பம், கிளப்புகள், விளையாட்டு போன்றவை குறித்த அமர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 பெருந்தொற்று என்பவற்றைத் தொடர்ந்து இப்பல்கலைக்கழகம் பல வருடங்களாக அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் இருந்தது.

இவ்வாறான சூழலில் தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரியும் கிழக்கு மாகாணத்துடன் நீண்டகாலம் உறவைப் பேணிவருபவரும் அரசியல்வாதியும் நிர்வாகியுமான மங்கள செனரத் இப்பல்கலைக்கழகக் கட்டடங்கள் மீண்டும் அதன் ஸ்தாபகரான முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

அவர் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பெரிதும் வரவேற்றதோடு கல்வி மற்றும் பிற துறைகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதியின் முயற்சிகளையும் பெரிதும் பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT