Monday, May 20, 2024
Home » உலகின் கவனத்தை சவுதி அரேபியாவின் பக்கம் திருப்பவைத்த உலக நாயகன் முஹம்மத் பின் சல்மான்

உலகின் கவனத்தை சவுதி அரேபியாவின் பக்கம் திருப்பவைத்த உலக நாயகன் முஹம்மத் பின் சல்மான்

by Gayan Abeykoon
April 5, 2024 7:13 pm 0 comment

இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் புனித மக்காவில் வைத்து சவுதி அரேபியாவின் இளவரசர் பட்டத்தை முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்துக்கு ஹிஜ்ரி 1438 புனித ரமழான் மாதம் பிறை 26ல் அதாவது 2017.06.21 ஆம் திகதி வழங்கி கௌரவித்தார். இந்நியமனம் வழங்கப்பட முன்னர் பிரதிப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றினார் முஹம்மத் பின் சல்மான். இளவரசர் பதவியோடு அவர் இப்பதவிகளையும் தொடர்ந்தும் வகித்தார். இந்நிலையில் மன்னர் சல்மான், இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கு பிரதமர் பதவியையும் வழங்கி வைத்தார்.

தனக்குப் பக்க பலமாக இருந்து நாட்டுக்காக உழைத்துவரும் மகனின் உழைப்பையும் தியாகத்தையும் அர்ப்பணிப்புகளையும் தூரநோக்குச் சிந்தனைகளையும் நிர்வாகத் திறமைகளையும் அவதானித்த தந்தை மன்னர் சல்மான், நாட்டை திறம்பட கட்டியெழுப்ப இவரால் முடியும் என்பதையும் நன்குணர்ந்து கொண்டார். அதற்கேற்ப அவருக்கு இளவரசர் பதவியை வழங்கினார். அதேநேரம் உயர்நிலை பொறியியலாளரான முஹம்மத் மிகவும் சிறந்த ஆற்றல் மிக்க திறமைசாலி, நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லக்கூடியவர் என்பதை நாட்டு மக்களும் ஏற்கனவே அறிந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இளவரசர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை நாட்டு மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் அவரது நியமனத்தை பெரிதும் வரவேற்று பாராட்டியதோடு அவரை ‘இளைஞர்களின் தலைவர்’ எனவும் அழைக்கலாயினர்.  முஹம்மத் பின் சல்மான் இளவரசராக நியமிக்கப்பட்டதானது சவுதியின் பிரமாண்டமானதொரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. அவர் சுறுசுறுப்பு மிக்க இளம் வயதுடையவராக இருந்த போதிலும் பரந்த அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அரசியல் முதிர்ச்சி கொண்டவராகவே விளங்கினார்.

அந்த வகையில் நவீன உலகுக்கு ஏற்ற வகையில் சவுதி அரேபியாவை கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தியுள்ள அவர், விஷன் 2030 என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க தொலைநோக்கு திட்டத்தை நாட்டுக்கு முன்வைத்தார். அத்திட்டத்திற்கு மக்கள் முழுமையான ஆதரவை நல்கியுள்ளனர். இப்பின்னணியில் சவுதியைக் கட்டியெழுப்பும் அனைத்து வேலைத்திட்டங்களும் இந்த தொலைநோக்கு திட்டத்தின்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்காக அவர் அர்ப்பணிப்புக்களுடன் உழைத்து வருகிறார். இந்தப் பயணத்தில் அவர் பல சாதனைகளையும் படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 07 ஆண்டுகளில் அவர் புரிந்துள்ள சாதனைகள் சவுதி வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன. அதனால் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டு ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவானது உலகில் மிகச் சிறந்த ஒரு நாடாக விளங்குகிறது. உலக முஸ்லிம்கள் மார்க்க ரீதியில் அவர்களது புனிதக் கடமையான ஹஜ், உம்ரா கிரியைகளை நிறைவேற்றவும் மேற்கொள்ளவும் சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும். அதுவே இறைவனின் ஏற்பாடாகும். அத்தோடு இஸ்லாமியச் சின்னங்களையும் புராதனச் சின்னங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது சவுதி.

புனிதக் கடமைகளை நிறைவேற்ற வரும் உலக முஸ்லிம்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சவுதி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. குறிப்பாக புனித மக்கா, மதீனா வரும் யாத்திரிகர்களுக்கு இரு ஹரம் ஷரீப்களிலும், விமான நிலையங்களிலும், தரிசிக்கின்ற புனித இடங்களிலும் உள்விவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சு, ஹஜ் உம்ரா அமைச்சு மற்றும் விஷேட பாதுகாப்புப் படையினர், விஷேட உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என அனைவரும் அளவிலா சேவைகளைச் செய்து வருகின்றனர். சவுதி முன்னெடுத்து வரும் இந்த இணையற்ற சேவைகளை உலக மக்கள் பெரிதும் பாராட்டிய வண்ணமுள்ளனர். தன் தந்தை மன்னர் சல்மானுடன் இணைந்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இச்சேவைகளை முன்னெடுத்து வருகிறார்.

மேலும் மத்திய கிழக்கின் தலைநகராக விளங்கும் சவுதி, பொருளாதார ரீதியில் மிக சக்திவாய்ந்த நாடாகவும் திகழ்கிறது. இயற்கை வளங்கள் நிறைந்த நாடான போதிலும் அந்த வளங்களில் மாத்திரம் தங்கியிராமல் அதையும் தாண்டி பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் சவுதி பயணிக்க வித்திட்டுள்ளார் இளவரசர் முஹம்மத். இதன் நிமித்தம் பாரிய பங்களிப்புக்களை அவர் செய்து வருகிறார்.

இதன் பயனாக உல்லாச பயணத்துறையில் பாரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது சவுதி அரேபியா. அதற்கு இளவரசர் முஹம்மத் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் பாரிய பங்களிப்புக்களை நல்கியுள்ளன. இது நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைய வழிவகுத்துள்ளது. அதன் பயனாக 2023 இல் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் சவுதிக்கு வருகை தந்துள்ளனர்.

அதேநேரம் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் திர்இய்யா, முகஅப், கித்திய்யா, சவுதி பசுமைத்திட்டம், மத்திய கிழக்கு பசுமை, செங்கடல் விமான நிலையம், மன்னர் சல்மான் சர்வதேச விமான நிலையம், அல் உலா சுற்றுலா என பல்வேறு பாரிய அபிவிருத்தித்திட்டங்களும் அவரது சிந்தனையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் வெற்றியும் கண்டுள்ளன.

இது தொடர்பில் ‘ரெட் சீ குளோபல்’ நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், ஆண்டிற்கு 10 லட்சம் பயணிகளை வரவேற்க செங்கடல் விமான நிலையம் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவை உலகளாவிய சுற்றுலாத்தளமாக மாற்றும் வகையில் தயாராகி உள்ள Red Sea International Airport, கடந்த ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவையையும் ஆரம்பித்துள்ளது. அதன் அடுத்த கட்டமாக, ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவையையும் தொடங்க உள்ளது. ‘பிளை டுபாய்’ என்ற விமானம், துபாயிலிருந்து நேரடி விமான சேவையை முதல் முறையாக ஆரம்பிக்கவிருக்கிறது. தற்போது தொழில்நுட்பம், நிர்வாக கட்டமைப்பு போன்றவற்றிலும் சவுதி முன்னிலையில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் சவுதி அடைந்துள்ள முன்னேற்றத்தை பிரித்தானியா அடைய இன்னும் 30 ஆண்டுகள் செல்லுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இம்முன்னேற்றத்திற்கும் இளவரசரின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

அதேநேரம் ஜி 20, பிரிக்ஸ் அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் பொருளாதார வலுவான நாடுகளுடன் போட்டி போட்டு தனது நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த இளவரசர் அயராது உழைத்து வருகிறார். அதன் பிரதிபலன்களை சவுதி அடைந்து வருகிறது. அத்தோடு ஆயுத உற்பத்தியிலும் உலக வல்லரசுகளை முந்தும் அளவுக்கு பாரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது சவுதி. உலகில் போரிடத் தயார் நிலையில் இருக்கும் படைகளில் முதன்மையான படையாக விளங்கும் சவுதி அரேபியா படை வீரர்கள் உலகின் ஆறாவது சக்திவாய்ந்த இராணுவமாகவும் கருதப்படுகிறது.

மேலும் கடந்த ஏழு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் விரைவான படிகள், சாதனைகள் நிறைந்த புகழ்பெற்ற வரலாற்றை எழுதும் ஒரு நாடாக சவுதியை மாற்றியுள்ளார் இளவரசர். உலக வல்லரசுகள் அனைத்தும் மூக்கின் மேல் கை வைத்து சிலாகிக்கும் அளவுக்கு சவுதி அரேபியா விளங்குகிறது. இன்று உலகின் மூத்த தலைவர்கள், அரசியல்வாதிகள், நிதியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களுக்கு ஒரு முக்கிய இடமாக திகழுகிறது சவுதி.

பல்தேசிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை சவுதியின் தலைநகர் ரியாதில் அமைக்க வேண்டுமென இளவரசர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பல நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை அமைத்துள்ளன. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மற்றும் உத்திகளுடன் இளவரசர் சவுதி அரேபியாவின் விண்ணை ஒளிரச் செய்துள்ளார்.

இவை இவ்வாறிருக்க, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில் பயிற்சித்துறையில் சவுதி அவர் உலகளவில் முதலிடம் பிடிக்க வழிசெய்துள்ளார். வளர்முக நாடுகளால் மாத்திரம் தான் விண்வெளிக்கு பயணிக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி நாமும் சளைத்தவர்கள் அல்லர் என்ற அடிப்படையில் அவர், சவுதி வீர வீராங்கணைகளை பயிற்றுவித்து விண்வெளிக்கு அனுப்பி சாதனை புரிந்துள்ளார். அத்தோடு தனது நாட்டு மாணவ மாணவிகள் பல்துறைகளிலும் அரச செலவில் கற்று சாதனைகள் புரிய வைத்திருக்கிறார். அதன் ஊடாக சவுதி ஆராய்ச்சித்துறையில் உலகில் முன்னணி நாடாகவும் விளங்குகிறது. சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற கண்டுபிடிப்பு போட்டிகள் பலவற்றில் முதலாம், இரண்டாம் இடங்களை தன்வசப்படுத்தி கொண்ட சவுதி, 100 பேர் கலந்து கொண்ட சர்வதேச கண்டுபிடிப்பு போட்டியொன்றில் முதல் 37 இடங்களை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கான பெருமை இளவரசர் முஹம்மத் பின் சல்மானையே சாரும்.

இவை இவ்வாறிருக்க, உலக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் சவுதி முன்நிற்கிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா மோதல், சூடான், பலஸ்தீன் பிரச்சினைகளுக்கும் சமாதான வழிகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க இளவரசர் அயராது உழைத்து வருகிறார். அத்தோடு போரினால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன், சூடான் நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் உக்ரைன் மக்களுக்கும் பல தொன் உணவுப் பொருட்களை அனுப்பி தமது மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதனால் இளவரசர் முஹம்மத், உலகின் சமாதானத் தூதுவர் எனப் பலராலும் பாராட்டப்படுகிறார்.

அதே போன்று சூடானில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையை மிகக் கவனமாகக் கையாண்டு சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சவுதி அரேபியாவுக்கு அழைத்து சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்த இளவரசர், சூடான் உள்நாட்டு யுத்தத்தில் சிக்குண்டிருந்த பல நாடுகளையும் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக சவுதிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு உணவு, மருத்துவம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவரவர் நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த பெருமையும் இவரையே சாரும்.

அந்த வகையில் சூடானில் சிக்குண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பில் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைஸல் பின் பர்ஹான் ஆல் ஸஊத் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்கவும் தவறவில்லை.

இவை இவ்வாறிருக்க, மனிதாபிமானத்தில் சவுதியை விட ஒரு நாடு இல்லை. அந்தளவுக்கு உலகை வென்றுள்ளது சவுதி. பலஸ்தீனப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் கையாளுவதில் இளவரசர் முஹம்மத் அரும்பாடுபட்டு வருகிறார். இதன் நிமித்தம் சவுதி ஏற்பாட்டில் பல உச்சிமாநாடுகள் நடாத்தப்பட்டுள்ளன. இளவரசர் முஹம்மத் அவர்களும் சவுதி வெளிவிவகார அமைச்சர் பைஸல் பின் பர்ஹான் ஆல் ஸஊத் அவர்களும் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முஹம்மத் ஆகியோரின் விஷேட வேண்டுகோளுக்கு அமைய அவ்விருவரும் உட்பட சவுதி அரேபிய மக்கள் அனைவரும் பிரமாண்டமானதொரு நன்கொடை சேகரிப்பில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இற்றைவரையும் உணவு, மருந்து வகைகள், கூடாரங்கள், அம்பியூலன்ஸ் வண்டிகள் என பெருந்தொகை மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் சவுதியின் எட்டு சரக்குக் கப்பல்களில் 1000 தொன்கள் படி நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் 100க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களிலும் மற்றும் பாரிய ட்ரக் வண்டிகள் மூலமும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் அனுப்பப்பட்டு வருவதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மேலும் ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அந்நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதை நன்குணர்ந்த இளவரசர், தாம் பொறுப்பை ஏற்ற பின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களால் செய்யப்பட்ட ஊழல்களை அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பெற்று நாட்டின் திறைசேரியில் சேர்த்தார். இதன் ஊடாக நாடு இழந்த பல பில்லியன்கள் ரியாழ்கள் மீண்டும் நாட்டுக்குக் கிடைத்தது. இது நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தலைமை தாங்கி முன்னெடுத்த இளவரசர், திருடப்பட்ட அல்லது மோசடி செய்யப்பட்ட தேசத்தின் பணம் அனைத்தையும் மீட்டு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அதேவேளை தாம் பதவிக்கு வந்த பின்னர் தமது நாட்டில் பயங்கரவாதம், போதைப்பொருள் குற்றங்கள் அனைத்தையும் இளவரசர் அடியோடு இல்லாதொழித்துள்ளார். பிராந்திய மற்றும் உலக அளவில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் 44 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய இராணுவக் கூட்டணியின் மிக முக்கியமான தலைவராகவும் இவர் விளங்குகிறார்.

உலகளவிலும் பிராந்திய அளவிலும் சவுதி அரேபியாவின் நிலையை வலுப்படுத்தியுள்ள இளவரசர், உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் பல இராஜதந்திர சாதனைகளையும் படைத்துள்ளார். இது வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதற்கு பெரிதும் பங்களித்துள்ளது.

இளவரசர் எப்போதும் குறிப்பிடும் ஒரு விடயத்தை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். அது தான், “சவுதி அரேபியா இப்போது பூமியில் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்று”

உலகில் யாராவது தங்களது நாட்டில் பயங்கரவாதத்தையும் போதைப் பொருள் குற்றங்களையும் ஊழலையும் ஒழித்து நாட்டுப் பிரஜைகளுக்கு அளப்பரிய சேவைகளையும் செய்து தங்களது நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றால் அதற்கான சிறந்த முன்மாதிரியாக சவுதி அரேபிய மன்னரும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானும் விளங்குகிறார்கள்.

ஆக, சவுதி அரேபியாவையும் அதன் மக்களையும் நவீன யுகத்திற்கு ஏற்ப கட்டியெழுப்புவதிலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதிலும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான், தந்தையும் மன்னருமான சல்மானுடன் இணைந்து அர்ப்பணிப்புக்களுடன் உழைத்து வருகின்றார். அவர் நவீன சவுதியை செதுக்கும் தனித்துவம் மிக்க சிற்பியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT