Home » சித்ரகுப்த விரதம்

சித்ரகுப்த விரதம்

by damith
April 1, 2024 11:32 am 0 comment

சித்திரை மாத வைபவங்களில் மிக முக்கியமானது சித்ரகுப்த விரதம். சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்திரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாளான சஷ்டி அன்று உபவாசம் இருந்து அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் திருக்கதையைப் படிப்பது விசேஷம். அந்தக் கதை முருகப்பெருமானுக்கு சிவனாரால் அருளப் பெற்றது என்பார்கள்.

த்விஜவர்யர்’ என்ற வேதியர் சகல சாஸ்திர-வேதங்களிலும் தேர்ந்தவர். இருந்தாலும், அவற்றில் சொன்னவற்றை அவர் கடைப்பிடிப்பதில்லை. தான – தர்மம் என்பது அவரைப் பொறுத்தவரை புத்தகங்களில் மட்டும்தான்!

​இப்படியெல்லாம் இருந்தாலும் அவரிடம் ஒரு நல்ல குணமும் இருந்தது. அவர் சாப்பிடுவதற்கு முன்னால், ‘‘சித்ராய நம: சித்ரகுப்தாய நம: யமரூபிதராய நம:’’ எனச் சொல்லி சித்திரகுப்தருக்கு பலி போடுவார். பிறகுதான் சாப்பிடுவார். த்விஜவர்யரின் மனைவி சோமாவும் நல்லதே நினைத்தது இல்லை. ஆனால், சித்திரகுப்தருக்கு உணவு இடும்போதெல்லாம் த்விஜவர்யர், சோமாவையும் கூடவே வைத்துக் கொண்டதால், அவளுக்கும் பலன் கிடைத்தது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களை யமதர்மன் முன் நிறுத்தினார்கள். சித்திரகுப்தன், ‘‘இவர்கள் சித்திரகுப்த விரதம் இருந்தார்கள்!’’ என்றான்.

‘‘இந்த இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்!’’ என்றான் யமன். விரதத்தை அறியாமல் செய்த அவர்களுக்கே அப்படியென்றால், அறிந்து செய்பவர்கள் அடையும் பலனைச் சொல்லவும் வேண்டுமா?!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT