தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் (NFF) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு, துபாய் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில், தொடர் கூட்டங்களுக்காக ஐரோப்பாவிற்கு பயணிக்க தயாராகிய விமல் வீரவன்ச, காலாவதியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
எவ்வாறாயினும், தன்னிடமுள்ள கடவுச்சீட்டு தொலைந்து போனது எனவும், புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் அது கிடைத்துள்ளமை தொடர்பிலும் விமான நிலையத்திற்கு வந்த அவர் உணர்ந்ததாக எம்பி கூறியிருந்தார்.
ஆயினும் கடவுச்சீட்டு தொலைந்ததாக பொய்யாக தெரிவித்தமை, காலவதியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்டமை தொடர்பில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் குறித்த வழக்கு இன்றையதினம் (01) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு, அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.