Monday, May 13, 2024
Home » பாவனைக்குதவாத பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த திட்டம்

பாவனைக்குதவாத பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த திட்டம்

by Gayan Abeykoon
March 29, 2024 1:10 am 0 comment

ல்லின மக்கள் வாழும் ஒரு நாடு இலங்கை. இங்கு பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தத்தமது சமய, கலாசார விழுமியங்களுடனும் தனித்துவ அடையாளங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த அனைத்து மக்களதும் பண்டிகைகள் எதிர்வரும் நாட்களில் அவர்களை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்தவ மக்களின் உயிர்த்த ஞாயிறு பண்டிகை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையாகும். அதேநேரம் சிங்கள, இந்து மக்களது புத்தாண்டும் முஸ்லிம்களின் ரமழான் பண்டிகையும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அமைந்திருக்கின்றன.

இவ்வாறு இக்காலப்பகுதி இலங்கையில் வாழும் மக்களின் பண்டிகைகளைக் கொண்டுள்ள காலமாக விளங்குகிறது. அதனால் ஒவ்வொருவரும் தத்தம் பண்டிகையின் நிமித்தம் தயாராவதில் ஈடுபட்டுள்ளனர். இதன் நிமித்தம் அதிக சிரத்தையும் அக்கரையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக புத்தாடைகள் கொள்வனவு செய்வதிலும் இனிப்புப் பண்டங்களை தயாரிப்பதிலும் அவற்றைக் கொள்வனவு செய்வதிலும் பாவனையாளர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர். இந்த நிலையில் கொழும்பு உட்பட ஒவ்வொரு நகரங்களிலும் வழமைக்கு மாறாக சனநெரிசலைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோசடியான வர்த்தகர்களும், வியாபாரிகளும் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பவர்களும் தரமற்ற பொருட்களையும் பாவனைக்குதவாத பண்டங்களையும் சந்தைக்கு விடக்கூடிய அச்சுறுத்தல் நிலவிக் கொண்டிருக்கின்றது.

மக்களின் பண்டிகைக்கால ஏற்பாடுகள் பரபரப்பு மிக்கதாக அமைந்து விடுவதால் உணவுப் பண்டங்களதும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களதும் தரம், காலாவதியாகும் காலம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தரமற்ற பொருட்களும் பாவனைக்குதவாத பண்டங்களும் சந்தைக்கு வரக்கூடிய ஆபத்து நிலவிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலைமை குறித்து இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விஷேட செலுத்தியுள்ளது. அந்த அடிப்படையில் பண்டிகைக் காலத்தையொட்டி சந்தைக்கு வரும் பொருட்களின் தரம், பயன்பாட்டுக்குரிய காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நாடளவிய ரீதியில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இச்சங்கத்தினர் தீர்மானித்து இருக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள சில உணவு வகைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதோடு உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவு வகைகள், பழங்கள் என்பனவும் பொதுசுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இப்பணியின் நிமித்தம் மூவாயிரம் பொதுசுகாதாரப் பரிசோதகர்ககள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையும் காலத்திற்கு அவசியமான வேலைத்திட்டமும் ஆகும். இதன் ஊடாக மோசடி வர்த்தகர்களும் வியாபாரிகளும் உணவுப் பண்டத் தயாரிப்பாளர்களும் மக்களை ஏமாற்றி இலாபம் பெறும் வகையில் பாவனைக்குதவாத பொருட்களையும் காலாவதியான பண்டங்களையும் சந்தைக்கு விட மேற்கொள்ளும் முயற்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களை மோசடி வியாபாரிகளும் தயாரிப்பாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது வழமையாகும்.

அதன் காரணத்தினால் தரமற்ற பொருட்களையும் காலாவதியான பண்டங்களையும் நுகரும் ​போது ஆரோக்கிய ரீதியில் பலவிதமான உபாதைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்கக் கூடியதாக இருக்கும். அவை சில சமயம் மிக மோசமான உபாதைகளாகக் கூட அமைந்து விடலாம். அதனால் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் முன்னெடுக்கும் இந்நடவடிக்கை பெரிதும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

ஆகவே பாவனையாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி பொதுசுகாதார பரிசோதகர்கள் முன்னெடுக்கும் உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலவதியாகும் காலம் உள்ளிட்ட விடயங்களை பரீட்சிக்கவென மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உற்பத்தியாளர்களும் தயாரிப்பாளர்களும் மாத்திரமல்லாமல் பாவனையாளர்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்ல வேண்டும், அதன் ஊடாக வீனாண உபாதைகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தையும் பயன்படுத்தக்கூடிய காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT