அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு நேற்று (28) கல்முனை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவானினால் மேற்படி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு குறித்த சம்பவத்தில் மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 63 வயதுடைய முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 14ஆம் திகதி அதிகாலை குறித்த வீட்டில் வைத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில், 29 வயதான முஹம்மது கலீல் முஹம்மது றிகாஸ், 15 வயதான முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா ஆகியோர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.
சந்தேகநபரான தந்தை பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், படுகாயமடைந்த சந்தேகநபர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பாறுக் ஷிஹான்