உள்ளூர் விவசாயிகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விசேட பண்ட வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படுமென, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதற்கமைய குறித்த வரிக்குப் பதிலாக உள்ளூர் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் சுங்க வரியுடன் இணைக்கப்பட்ட புதிய பருவகால வரி அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திகள் சந்தைக்கு வரும் வேளையில், அவர்களைப் பாதுகாக்க உடனடியாக அறிமுகப்படுத்தப்படக்கூடிய வரியாக, விசேட பண்ட வரி மிகவும் முக்கியமானதாக அமைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், வரி விதிக்கப்பட்ட காலப்பகுதியில், நாட்டில் உள்ள பொருட்களுக்கு அதிக விலையேற்றம் ஏற்படுவதோடு, வரி குறைக்கப்படும் போது, எதிர்பார்த்த நிவாரணம் மக்களுக்குச் செல்லாமல் வர்த்தகர்களுக்குச் செல்கின்றமை போன்ற பிரச்சினைகளுக்கு, புதிய பருவகால வரி மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், விவசாயப் பொருட்கள் சந்தைக்கு வரும் நேரத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, வளர்ந்த நாடுகளில் இருப்பதைப் போன்று, கட்டணங்கள் தொடர்பான புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.