Monday, April 22, 2024
Home » தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை

by mahesh
March 27, 2024 6:00 am 0 comment

இலங்கை ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும் நாடாகும். அதன் பயனாக இந்நாட்டில் அரச துறையைப் போன்று தனியார் துறையும் பலமானதும் விசாலமானதுமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்நாட்டின் பொருளாதாரத் துறைக்கு பாரிய பங்களிப்பை நல்கும் துறையாகவும் அது விளங்குகிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு இத்துறையினர் அளிக்கும் பங்களிப்பு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதவையாகும்.

அந்த வகையில் இலங்கை தொழில் படை புள்ளிவிபரங்களின் படி, 2022 ஆம் ஆண்டில் 87 இலட்சத்து 61 ஆயிரத்து 803 பேர் பொருளாதார ரீதியில் உழைப்பாளர் படையினராக இருந்தனர். அவர்களில் 42.7 சதவீதமானோர் தனியார் துறையில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். இது பாரியதொரு தொழிலாளர் படை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இருந்த போதிலும் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் குறித்து அரசாங்கம் விஷேட கவனம் எடுத்துக் கொள்வது போன்று தனியார் துறையினர், தங்களது நலன்களில் கவனம் செலுத்துவதில்லை என்ற குறைபாடு தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதாவது அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டங்களின் ஊடாக சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கப்படுவது இதற்கு உதாரணங்களாகத் தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் கடந்த காலங்களில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பளமும் அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.

என்றாலும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து இம்முறை விஷேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

இதன் நிமித்தம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளடக்கி தேசிய தொழில் ஆலோசனை சபையொன்றை அமைந்துள்ளார். அந்த ஆலோசனை சபை, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அது தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

அந்த சிபாரிசுகளின் அடிப்படையில் ஆகக் குறைந்த நாளாந்த சம்பளத்தை ரூ. 500.00 இலிருந்து ரூ.700.00 ஆக அதிகரிப்பதற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய ஆகக் குறைந்த மாத சம்பளம் ரூ. 12,500.00 ஆகும். அதனை ரூ. 17,500.00 வாக அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்திருந்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை ரூ 5000.00 வால் அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் தேசிய சம்பள சட்டத்தில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரது இந்நடவடிக்கையையும் அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் தனியார் துறை ஊழியர்கள் பெரிதும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.

இது காலத்திற்கு அவசியமான நடவடிக்கையாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் தனியார் துறையினரின் குறைந்த பட்ச சம்பளமானது இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஆனால் அதன் பின்னர் பொருளாதார ரீதியில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாடு முகம் கொடுத்த பொருளாதார நெருக்கடி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்நெருக்கடியினால் அரச, தனியார் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்புகளுக்கும் தாக்கங்களுக்கும் உள்ளாகினர்.

என்றாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றது முதல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களுக்கு அமைய நிவாரணங்களும் சலுகைகளும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அசுவெஸ்ம நிவாரணம், அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு என்றபடி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு நாட்டின் எல்லா மட்ட மக்களும் பயனடையும் வகையில் மின் கட்டணக் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பால்மாவின் விலை குறைப்பு, கடந்த மாதம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைத்திருத்தம் செய்யப்படாமை அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

நாட்டு மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே இவ்வாறு பல்வேறு நிவாரணத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தடிப்படையில் தனியார் துறை ஊழியர்களுக்கான ஆகக் குறைந்த சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் ஊடாக இந்நாட்டிலுள்ள தனியார் துறை ஊழியர்கள் பெரிதும் நன்மை அடைவர். இதனை உறுதிபடக்கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT