Tuesday, May 14, 2024
Home » தொடங்கொடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

தொடங்கொடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

by damith
March 25, 2024 6:00 am 0 comment

களுகங்கையும் கடலும் ஒன்றறக் கலந்து கடலுடன் சங்கமமாகும். களுத்துறை மாநகருக்கு தென் கிழக்கே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் தொடங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட பயாகல பெருந் தோட்ட பிரிவில் திருவருள் பாலித்து வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்தன கும்பாபிஷேக திருவிழா கடந்த சோபகிருது வருடம் பங்குனித் திங்கள் 7ஆம் நாள் (20.03.2024) புதன்கிழமை வளர்பிறை ஏகாதசி திரியும் பூச நட்சத்திரமும் கூடிய காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் அமைந்திருந்த மங்களகரமான சுபமுகூர்த்த வேளையில் பெரும் திரளான பக்தர்கள் புடைசூழ வெகு கோலாகலமாக நடைபெற்றது.

நூற்றாண்டு கால வரலாற்றுப் பெருமைக்கு முற்பட்ட மேற்படி ஆலயம் ஆரம்ப காலக் கட்டத்தில் முன்னோர்களால் ஆலமரத்டியில் மரத்தடியில் கற் சிலைகளை வைத்து பூஜை வழிபாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்மனுக்கு சிறு கொட்டகையிட்டு கோவில் அமைத்து சிலை வைத்து பூஜை வழிபாடுகளை முன்னெடுத்து வந்ததாகவும் மரபுவழிக் கதைகள் மூலம் எமக்கு அறியக் கிடைக்கின்றது. அதன் பின்னர் 1977ஆம் ஆண்டில் நிரந்தரமாக ஆலயம் ஒன்றை அமைத்து பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னடைவை சந்தித்தது.

எனினும் தோட்ட பொது மக்கள், இளைஞர் யுவதிகள், தலைவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் விடாமுயற்சியால் 2013ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் அப் பிரதேசத்தைச் சேர்த்த பிரபல வர்த்தகரும் புகழ்பெற்ற விஜே உற்பத்தி நிறுவன உரிமையாளர் மற்றும் பணியாளர் அருண கொத்தலாவல முன்வந்து சுமார் நூற்று ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் முழுமையான ஆலயம் ஒன்றை அமைத்து, சுவாமி திருவுருவச் சிலைகளை வழங்கி, கலச ஸ்தாபனம் மற்றும் கும்பாபிஷேகம் செய்து வைத்து தொடர்ந்து பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்ல தோட்ட பக்த பெருமக்களிடம் கையளித்தார். தொடங்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட, பயாகல பெருந் தோட்ட பிரிவில் திருவருள் பாலித்து வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்தன கும்பாபிஷேக திருவிழா 2024. 3.14ஆம் திகதி முதல் 2024.3.20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தொடர்ந்து ஏழு தினங்கள் நடைபெற்றது. இத் திருவிழாவின் முதலாம் நாள் பூசை (14.3.2024) வியாழக்கிழமை காலை பூரவாங்க கிரியைகளுடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மாலை தொடங்கொடை நகரில் அமைந்துள்ள விஜேய நிறுவனத்தின் மூலம் விசேடமாக இந்திய மகாபலிபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சுவாமி திருவுருவங்கள் அங்கிருந்து ஆலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரண்டாம் நாள் (15.3.2024) வெள்ளிக்கிழமை மாலை கலசஸ்தாபனம், தீபஸ்தாபனம், விம்பஸ்தாபனம் என்பன நடைபெற்றன. மூன்றாம் நாள் (16.3.2024) சனிக்கிழமை காலை பக்தர்களால் பால்குடம் எடுத்துச் சென்று பக்தர்களின் கரங்களால் திருவுருவத்திற்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் மாலை திருமுறை பாராயணம் நடைபெற்றது. நான்காம் நாள் (17.3.2024) ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, எண்ணெய் காப்பு, திருவுருவத்துக்கு எண்ணெய் சாத்துதல் என்பன நடைபெற்றன. ஐந்தாம் நாள் (18.3.2024) திங்கட்கிழமை மாலை திருமாவிளக்கிடல் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றன. ஆறாம் நாள் (19.3.2024) காலை யாகபூஜை, விசேட திரவிய ஹோமம் மாலை விம்ப சுத்தி, நியாயங்கள் ஸ்பருசாகுதி என்பனவும் நடைபெற்றதுடன். இறுதி ஏழாம் நாள் (20.3.2024) புதன்கிழமை காலை பூர்ணா/ஹதி, தீபாராதனை, வேத திருமுறை பாராயணம், நர்த்தன சமர்ப்பணம், கும்ப உத்தாபனம் வளர்பிறை ஏகாதசி திதியும் பூச நட்சத்திரமும் கூடிய காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுபமங்கள முகூர்த்த வேளையில் புனராவர்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

நாராயணசாமி ஜெயரட்ணம் (களுத்துறை சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT