ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய பிள்ளையார் ஆலயம் என்ற பெருமையைப் பெறும் இந்த ஆலயத்தில் ஐந்தாவது கும்பாபிஷேக நிகழ்வு இன்று (25) காலை 9.25 மணியளவில் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு மங்கல கணபதி பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, காலை 9.25 முதல் 10.37 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் அடியார்கள் அரோஹரா கூற, விண்ணதிர வேதம் ஓத, மங்கல வாத்தியம் ஒலிக்க, நூதன சப்ததள 108 அடி புதிய இராஜகோபுர ஸ்தூபி விமான அபிஷேகம் மற்றும் கும்ப வீதிப் பிரதட்சணம், மூல ஆலயப் பிரவேசம், ஆவாஹனம், மூர்த்த தானம், மஹா கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டு, தசமங்கல தரிசனம், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், குருமார் சம்பாவன கெளரவிப்பு, விசேட பூஜைகள் நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் உள்ளிட்ட, பல பிரமுகர்கள், பெருந்திரளான பக்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் சுழற்சி நிருபர்