Saturday, May 11, 2024
Home » சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய மத்திய வங்கி முடிவு

சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய மத்திய வங்கி முடிவு

- அறிக்கை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி

by Prashahini
March 24, 2024 3:46 pm 0 comment

அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய, அதன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆளும் சபைக்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்குமிடையிலான கூட்டு உடன்படிக்கைக்குப் பின்னர் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட 2024-2026 காலப்பகுதிக்கான அண்மைய சம்பளத் திருத்தமானது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில், தமது சம்பளங்களுக்கான திருத்தமொன்றினை பரிசீலனையில் கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினதும் தொழில்சார் நிபுணர்களினதும் பெரும்பாலானோர் கூட்டான தீர்மானமொன்றினை மேற்கொண்டனர். இத்தீர்மானம் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஆக்கப்பட்ட சுயாதீன பரிந்துரைக்கு முன்னர், 2024 மாச்சு 16 அன்று அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கான கூட்டு உடன்படிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் அனைத்து ஊழியர் வகை முழுவதுமான திருத்தங்களை ஈடுபடுத்தி, சுயாதீனக் குழுவொன்றினால் மீளாய்வு செய்யப்படுமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் உயர்மட்ட நிதியியல் நிறுவனம் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கி, முன்னர் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் கீழும் தற்போதும் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழும் அதற்குரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு சுயாதீனமாகத் தொழிற்படுகின்றது.

உள்நாட்டு விலையினை எய்துதல் மற்றும் பேணுதல் அத்துடன் நாட்டின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை பாதுகாத்தல் என்பனவற்றில் இலங்கை மத்திய வங்கி பொறுப்புக்கூறத்தக்கதாகக் காணப்படுகின்றது.

இம்முக்கியத்துவம்வாய்ந்த தேசிய பொறுப்பாணையினை அடைவதற்கு, இலங்கை மத்திய வங்கி அதற்கென பல அனுபவம்பெற்ற அத்துடன் தொழில்சார் நிபுணத்துவ அலுவலர்களைப் பணிக்கமர்த்துவதுடன் அதன் முழுமையான இயலளவுடன் தொழிற்படும் பொருட்டு அதன் அனுபவம் வாய்ந்த அலுவலர்களைத் தக்கவைக்கும் நோக்குடன் அண்மைய சம்பளத் திருத்தம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT