Monday, May 20, 2024
Home » கனிம வளங்களை கையகப்படுத்தும் நோக்கில் சீனா காய் நகர்த்துகிறதா?

கனிம வளங்களை கையகப்படுத்தும் நோக்கில் சீனா காய் நகர்த்துகிறதா?

by Rizwan Segu Mohideen
March 22, 2024 10:56 am 0 comment

உலக கனிம வளச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தியாக சீனா உருவாகி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் அதன் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு அடிப்படையாக கனிம வளங்கள் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக உலகளாவிய ரீதியல் கனிம வளங்கள் மீது சீனா ஆர்வத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது.

கனிம வளங்கள் மீதான சீனாவின் ஆர்வமும், வெறியும் தனது எல்லைகளுக்கு அப்பால் சென்று தனக்கு தேவையான கனிம வளங்களைப் பெறுவதற்கான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

உலகின் கனிம வளங்களை கையகப்படுத்துவதில் சீனாவின் ஆக்கிரமிப்பு ரீதியிலான அணுகுமுறை, பல நாடுகளுக்கு இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளையும், புவியரசியல் சர்ச்சைகளையும் உருவாக்கியிருப்பதோடு, பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையில், இராஜதந்திர உறவுகளை சீர்குலைத்தும் வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உலகளவில் கனிம வளங்களை அகழ்வு செய்து கையகப்படுத்தும் சீனாவின் ஆதிக்கப் போக்கினால், உலகின் பல நாடுகள் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருப்பதாக அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாமல், கனிம வளங்கள் சுரண்டப்படும் நாடுகளில் உள்ள உள்ளூர் சமூகங்கள் சூழல் சார்ந்த பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கனிம வளங்களை கையகப்படுத்துவதில் சீனாவின் ஆக்ரோஷமான அணுகுமுறையால் உலகின் கனிம வளங்களின் பூரண கட்டுப்பாட்டு சீனாவின் கைக்கு செல்லும் அபாயகரமான நிலை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகளாவிய கனிம வள சந்தைகளில் சீனா செலுத்தும் அதிகாரமும், செல்வாக்கும் உலகின் பல நாடுகளுக்கு சவாலாக அமையும் என்று அஞ்சப்படுவதோடு, ஏனைய நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

கனிம வளங்களுக்கான சீனாவின் தீராத தாகம் , அதன் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் விளைவாக உருவானதாகும். நிலக்கரி, எஃகு மற்றும் அரிய பூமி கூறுகள் போன்ற பல்வேறு கனிமங்களை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்ற ரீதியில் சீனா பெரிதும் நம்பியுள்ளது.

இதன் காரணமாக, முக்கிய கனிம வளங்களுக்கான அணுகலைப் பாதுகாப்பதற்காக, சீன அரசாங்கம், வெளிநாட்டுச் சுரங்கத் திட்டங்களில் இராஜதந்திர வழிகள் மூலமும், நேரடி முதலீடுகள் மூலமும் இணைந்து வருகிறது.

எண்ணெய், தாமிரம் மற்றும் கோபால்ட் என்று சொல்லக் கூடிய வெள்ளை காந்த உலோகம் உள்ளிட்ட பெறுமதியான இயற்கை கனிம வளங்களுக்கான சீனாவின் தேடல் வெறிக்கு தீனி போடும் பூமியாக ஆப்பிரிக்கா மாறி இருக்கிறது.

வளமான கனிம இருப்புகளுக்கு பெயர் பெற்ற பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் சீனா பெருமளவில் முதலீடு செய்து, அந்நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸாம்பியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, அங்கோலா மற்றும் கினியா போன்ற நாடுகளில், சீன நிறுவனங்கள் தாமிரம் (copper), கோபால்ட் (cobalt), இரும்புத் தாது (iron ore) மற்றும் அலுமினிய ஹைட்ராக்சைட் கனிமங்களைக் கொண்ட போக்சைட் (bauxite) போன்ற கனிமங்களுக்கான சுரங்க அகழ்வு உரிமைகளைப் பெற்று அந்நாடுகளில் அதிக முதலீடுகளைச் செய்துள்ளது.

சீனாவின் உற்பத்தியில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதில் பெரும்பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. சீனாவுக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் ஏற்றுமதிகளுக்குத் தேவையான கனிமப் பொருட்கள் சீனாவில் குறைந்து வருகிறது. எனவே, சீனா கனிம வளத் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில், தனது கவனத்தை உலகின் கனிம வளம் நிறைந்த, ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளை நோக்கித் திருப்பி இருக்கிறது.

லத்தீன் அமெரிக்காவில், பிரேசில், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் சீனா கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. இந்த நாடுகளில் இரும்பு தாது, தாமிரம், லித்தியம் போன்ற கனிமங்கள் ஏராளமாக உள்ளன, அவை சீனாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

அவுஸ்திரேலியா, சீனா முதலீடு செய்யும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க நாடாகும், குறிப்பாக சுரங்கத் துறையில். சீன நிறுவனங்கள் அவுஸ்திரேலிய சுரங்கத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக அவுஸ்திரேலியாவிலிருந்து இரும்புத் தாது, நிலக்கரி மற்றும் அரிதான பூமித் தனிமங்களை இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருந்து வருகிறது.

தென்கிழக்கு ஆசியாவில், இந்தோனேசியா, மியான்மர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் சுரங்கத் திட்டங்களில், குறிப்பாக நிலக்கரி, வெள்ளை உலோகம் என்றழைக்கப்படும் நிக்கல் மற்றும் தகரம் போன்ற கனிமங்களை சீன முதலீடுகள் ஈர்த்துள்ளன.

சீனாவின் “பெல்ட் அண்ட் ரோட்” முன்முயற்சியின் மூலம் (BRI) மத்திய ஆசியாவில் உள்ள கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்த நாடுகளில் சீனா முதலீடுகளை அதிகரித்துள்ளது. இந்த நாடுகளில் யுரேனியம், தங்கம் போன்ற கனிமங்களின் கணிசமான உள்ளன.

மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக, தங்கம், தாமிரம் மற்றும் வெள்ளை உலோகம் போன்ற கனிமங்கள் அதிகம் உள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சொலமன் தீவுகள் போன்ற பசிபிக் தீவு நாடுகளிலும் சீனா சுரங்க அகழ்வுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

கனிம வளங்களை அகழ்வு செய்யும் சீன நிறுவனங்கள், பெரும்பாலும் அரச நிதியுதவியின் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த சீன நிறுவனங்கள் நிலத்திற்கு கீழான கனிம இருப்புகளை அகழ்வு செய்வதற்கு அந்தந்த அரசாங்கங்களுடன் வெளிப்படைத்தன்மையற்ற ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.

இலங்கையை பொறுத்தவரை, இந்து சமுத்திரத்தை இலக்கு வைத்து துறைமுக அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் திட்டங்களில் சீனா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

உள்கட்டமைப்புக்கு மேலதிகமாக, இலங்கையின் கனிம வளங்களிலும் சீனா அக்கறை காட்டியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. இலங்கை கிராஃபைட், தாது மணல் மற்றும் ரத்தினக் கற்கள் போன்ற கனிம வளங்களை கொண்டுள்ள நாடாகும். பெட்டரி என்கின்ற மின்கல உற்பத்தி தொழில்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமமான இலங்கையின் கிராஃபைட் மீது சீன நிறுவனங்கள் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பதில் சீனா அதிக ஈடுபாடு கொண்ட நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தில் இல்லாத போதிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தை இலக்கு வைத்து அது இலங்கையில் கட்டமைத்துள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுடன், மேலதிகமாக கனிய வளத் திட்டங்களும் சீன முதலீடுகளால் ஈர்க்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

– சூரியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT