Tuesday, May 14, 2024
Home » 2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமனம்

2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமனம்

by Prashahini
March 16, 2024 5:50 pm 0 comment

வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் இன்னும் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் முன்னோக்கிச் சென்றால், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவந்து தற்போது பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எமது அமைச்சும் நிறைய பங்களித்துள்ளது.

மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக் குழுக்களை உருவாக்க நாங்கள் உழைத்தோம். வறுமையில் வாடும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்கத் தேவையான பங்களிப்புச் செய்யப்பட்டது. தற்போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வெற்றிடமாகவுள்ள 2002 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம சேவை உத்தியோகத்தர்களைப் பணியமர்த்த கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று 15ஆம் திகதி வரை நடைபெற்றது. இதன்மூலம் அவசியமான கிராம சேவை உத்தியோகத்தர்களை வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்துடன், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று முன்தினம்(14) பிரதியமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகத்தர்களின் தொழில்சார் சங்கங்களுடன் கலந்துரையாடினார். அங்கு பயணச் செலவுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவர்களின் முன்மொழிவை முன்வைத்தனர். அது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஏற்கனவே நாம் சமர்ப்பித்துள்ளோம்.

அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பிரதான பிரச்சினையான கிராம அதிகாரிகள் யாப்பு உருவாக்கப்பட்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும், இந்த பிரச்சினையில் விரைவில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். மேலும், பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, மக்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து, சமூகத்தில் உள்ள பிளவை மீண்டும் ஒன்றிணைப்பது நமது கடமையாகவும் பொறுப்பாகவும் இருந்தது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்பினார். எனவே இன்னும் இரண்டு வருடங்கள் இந்த அமைப்பில் நீடிக்க முடிந்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் திட்டங்களை நிறுத்துவதன் மூலமும் சிறந்த நாட்டை உருவாக்க முடியும்” என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT