Monday, May 20, 2024
Home » தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பம்

தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பம்

by mahesh
March 13, 2024 11:30 am 0 comment

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போதைய உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப்.ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம்.இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம்.முஸாதிக், கலாநிதி ஏ.சி.எம்.ஹனஸ் ஆகியோரே இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவை சார்பாக பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் விண்ணப்பத்துக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி விடுத்திருந்தார்.

இந்நிலையில் புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விசேட ஒன்றுகூடலினூடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் பேரவை உறுப்பினர்கள் புள்ளிகள் இட்டு, அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். இந்த மூவரில் ஒருவரை உபவேந்தராக ஜனாதிபதி நியமிப்பார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்துள்ளமை விசேட அம்சமாகும். கடந்த 2021.08. 08ஆம் திகதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் 5ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விண்ணப்பித்துள்ள ஏழு பேரில் ஒருவரே ஆறாவது உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளார்.

திராய்க்கேணி தினகரன், பாலமுனை தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT