Monday, May 20, 2024
Home » சந்தர்ப்பவாத அரசியலை ஒதுக்கி பொருளாதார மேம்பாட்டுக்கு அனைவரும் உதவ வேண்டும்!

சந்தர்ப்பவாத அரசியலை ஒதுக்கி பொருளாதார மேம்பாட்டுக்கு அனைவரும் உதவ வேண்டும்!

களனி பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் எச்.எம். நவரத்ன பண்டா

by mahesh
March 13, 2024 12:02 pm 0 comment

கடந்த காலத்தில் இந்நாட்டில் நிலவிய பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஓரளவுக்கு தலைநிமிர்ந்து நிற்கின்றோம். இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்கிறார்கள். இதன்படி களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் எச். எம். நவரத்ன பண்டாவுடனான எமது நேர்காணல்:

(1) ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் வங்குரோத்து நிலைமையிலிருந்து மீள முடியும் எனக் குறிப்பிடுகிறார்கள். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் வங்ரோத்து நிலையை அகற்ற நாங்கள் மேற்கொண்ட வேலைத்திட்டத்தை தெரிவிப்பதே எங்களுக்கு முக்கியமானது. வங்குரோத்து நிலையைத் தவிர்க்க, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தி, வெளிநாட்டுக் கடனை அடைக்கும் நிலையை எட்ட வேண்டும். அதற்கு சுற்றுலா மற்றும் வெளிநாட்டு பணம் மூலம் நிறைய பணம் பெற வேண்டும். அல்லது ஏற்றுமதி மூலம் நிறைய வருமானம் பெற விரும்புகிறோம். அப்படி ஒரு விஷயத்தை நாம் உண்மையில் பார்க்க முடியாது இல்லையா? வங்குரோத்து நிலை நீங்கும் என்று சொல்லலாம். ஆனால் நாம் அரசியல் அறிக்கைகளை வெளியிடக் கூடாது, களத்தில் உள்ள யதார்த்தத்தைப் பற்றிப் பேச வேண்டும். நாம் 2019 நிலையை அடைந்து விட்டோமா? சுற்றுலா வளர்ச்சியடைந்ததா? நாம் வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுள்ளோமா? கையிருப்பு கணிசமாக வளர்ந்ததா? எனப் பார்க்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடனைப் பெற்றும் நாங்கள் கடனையே செலுத்தி வருகிறோம். அதனை நாம் முதலீடு செய்திருந்தால், அந்த முதலீட்டிலிருந்து வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் மற்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் நாம் வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறுவோம் என்று சொல்லலாம். பொருளாதார ரீதியில் அப்படியொன்றும் பார்க்கப்படவில்லை. நமது விவசாயம் பெரிதாக வளர்ச்சியடையவில்லை. சிறிய, நடுத்தர தொழில்கள் வளர்ச்சியடையவில்லை. என்ன காரணிகளால் இவ்வாறு கூறப்பட்டது என்பதில் சிக்கல் உள்ளது. இப்போது எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளது என்று ஒருவர் கூறலாம். ஆனால் இவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை. அப்படி நடந்தால், மின்கட்டணம் இவ்வளவு அதிகமாக இருக்க முடியாது. பெட்ரோல் விலை இவ்வளவு அதிகமாக இருக்க முடியாது. மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சி இருந்திருந்தால், இவற்றின் விலை கீழே சென்றிருக்க வேண்டும். வாழ்வாதார நிலைமைகள் மக்களுக்கு இவ்வளவு கடினமாக இருக்க முடியாது.

(2) பொருளாதார அபிவிருத்திக்காக அரசாங்கம் எந்தெந்தப் பிரிவுகளில் கவனம் செலுத்த வேண்டும்?

முதலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். இப்போதெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்று பேசுகிறோம். ஆனால் அது பொதுவாக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைதான். அதாவது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதில்லை. சுற்றுலாத் துறையில் நமக்கு முக்கியமானது 2019 இற்கு முன் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை. அந்த அளவுக்கு சுற்றுலாவை மேம்படுத்தினால் நல்லது. அதற்கு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய திட்டம் நம் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டும். மற்றையது, நமது நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பேசி, சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவது தூதுவர்களின் கடமை. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகரும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது எங்களுக்கு முக்கியம். மற்றைய விஷயம் என்னவென்றால், ஒரு சுற்றுலாப் பயணி மனநலத்தைப் பெறவே வருகிறார். இலங்கையில் மனநலம் பெறுவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும்.

அப்போதுதான் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். மற்றைய விடயம் என்னவென்றால், வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும்போது, ​​பெரும்பாலானவர்கள் வீட்டு வேலைக்கே செல்கிறார்கள். அதற்காக நாம் முடிந்தால், திறமையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அமைப்பை உருவாக்குவது மிகவும் நல்லது. வெளிநாட்டுத் தூதுவர்கள் அந்த நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இலங்கையில் தொழில்சார் பயிற்சித் திட்டத்தை ஆரம்பிக்க முடியும். நாம் ஒரு தொழில் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கும்போது, ​​இளம் தலைமுறை (தொழிலாளர்) வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். அதன் பிறகு, பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பலாம். அப்போதுதான் வீட்டு வேலைகளை விட அதிக அளவில் அந்நியச் செலாவணியைப் பெற முடியும். மறுபுறம், தற்போதைய வற் வரியால் சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செலவு மிகவும் அதிகரித்துள்ளது. அப்போது நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். செலவு அதிகரித்தால், விலையைக் குறைக்க வேண்டும். விலையை உயர்த்தினால் வெளிநாட்டு சந்தையில் போட்டி போட முடியாது. போட்டிபோட வேண்டுமானால், குறைந்த செலவிலும், குறைந்த விலையிலும், வெளிநாட்டுச் சந்தையில் நம் பொருட்களை விற்க வேண்டும். அதற்குத் தேவையான அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். எரிவாவு மற்றும் அதிகரித்த செலவுகள் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் தற்போது சரிவை சந்தித்து வருகின்றன.

உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். வற் வரி அனைத்தையும் பாதித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, அதாவது உற்பத்தித்திறன் குறைந்துள்ளது.

(3) மக்கள்அந்த சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறார்கள் இல்லையா?

ஆம். கண்டிப்பாக. வற் அதிகரிக்கும் போது, ​​நுகர்வோர் சிக்கலை எதிர்கொள்கிறார். பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் நுகர்வை மட்டுப்படுத்தியுள்ளனர். நுகர்வைக் கட்டுப்படுத்துவது என்பது உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் வேண்டும். அப்படியானால் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்த விஷயங்களை ஊக்குவிக்க அரசாங்கம் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம்.

(4) பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை வரிகளால் மட்டுமே கொண்டு வர முடியுமா?

முடியாது, வரி விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்கின்றனர். வரிகளை வசூலித்த பிறகு அதை என்ன செய்வது என்பது அடுத்த கேள்வி. உற்பத்தியாளர்களின் செலவைக் குறைக்கவும், தரத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பின் மூலம் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு வரிப்பணத்தை எடுத்துச் செலவு செய்தால், வரியை அதிகரிப்பதன் பலன் இன்னொரு பக்கம் சமூகத்துக்கு வரும். சில சமயங்களில் அஸ்வெசும என்று சொல்லப்படும் நிவாரணம் நிதிக்கு அரச வரவு செலவு திட்டத்திலிருநிது அதிகப் பணத்தை ஒதுக்குவதைப் பார்க்கிறோம். அப்படியானால்,அந்தப் பணத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மக்கள் சம்பாதித்து சாப்பிடக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது முக்கியம்.

ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இவற்றைக் கொடுத்தால் பரவாயில்லை என்று அர்த்தம். மற்றொன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கலாம். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் தொழில் செய்யக் கூடியவர்களுக்கு கொடுப்பதை மட்டும் எதிர்க்கிறோம். அதன் காரணமாக தினமும் சும்மா சாப்பிட பழகிக் கொள்கிறார்கள். வரிப்பணத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது, அவர்களுக்கு உணவு கொடுப்பதை விட சிறந்தது. 1948 முதல் இன்று வரை, மக்கள் சும்மாயிருந்து சாப்பிடக் கூடிய பொருளாதாரத்தை சுமார் 75 ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். எனவே ‘மீனைக் கொடுக்காமல் தூண்டிலை கொடுங்கள்’. அதைத்தான் அரசு வரிப்பணத்தில் செய்ய வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்துகிறது. விதிக்கப்படும் வரியிலிருந்தும் பலன்களைப் பெறலாம்.

(5) இலங்கையின் வரி வலைப்பின்னல் வலுவாக இருக்க வேண்டும், இல்லையா?

வரி செலுத்துபவர்களுக்கே எப்போதும் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்தில் வரி கட்டக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வேலைத்திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, வரி விதிப்பை விரிவுபடுத்த வேண்டும். வரி கட்டாத வணிக வர்க்கம் இருக்கிறது என்பது வேறு விஷயம். அந்த மக்களிடம் வரி வசூலிக்கும் திட்டத்தை உள்ளூர் வருமான வரித்துறை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, ஒருவர் வரி செலுத்தவில்லை என்றால், அந்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் கடனை செலுத்துவதை பார்க்கிறோம்.

10 முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வரிப்பணம் வசூலிக்கப்படுவது என்பது பொருளாதாரத்திற்கு எந்த நன்மையையும் அளிக்காது.

அதற்கு, ஒரு மாதத்தில் வசூலிக்கவேண்டிய வரித் தொகையை, அதே மாதத்தில் பெறும் முறையை, அரசு தயார் செய்ய வேண்டும். அப்படி நடந்தால் இந்த பொருளாதாரத்தை சரியான முறையில் பராமரிக்க முடியும். வளர்ந்த நாடுகளில், அந்த விஷயங்கள் சரியான நேரத்தில் செய்யப்படுகின்றன. அவர்கள் அந்தந்த நேரத்திலேயே பெறக்கூடிய வரியைப் பெறுகிறார்கள். அப்போது அந்தப் பணத்தை அரசு பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தலாம். நம் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. ஒரு பகுதி வரி செலுத்துகிறது. மற்றொரு பகுதி வரி ஏய்ப்பு செய்கிறது. வரி ஏய்ப்பு அதிகமாக உள்ளது. வரியை செயல்திறனாக்கினால் , பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தலாம்.

(06) அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் என்ன நடக்கிறது?

எந்த நிறுவனமும் தொடர்ந்து நஷ்டம் அடைந்து கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தை அரசின் கையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஏனென்றால் அதற்குக் காரணம் பொதுமக்களின் வரிப்பணத்தில் பயனற்ற ஒரு அமைப்பை நடத்துவதுதான். ஆனால் அதற்கு அங்குள்ள ஊழியர்கள் பொறுப்புக் கூற வேண்டும், அரசியல் பொறுப்புக் கூறப்பட வேண்டும், அதில் உள்ள நிர்வாக அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். அரசு நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால், அதற்கான பொறுப்பு அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்குச் செல்கிறது. அவர்கள் ஏன் நஷ்டம் அடைகிறார்கள் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். முதலில், தோல்வியடைந்தவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் தனியார் மயமாக்கப்பட்டால் பிரச்சினை இல்லை. முதலில் எந்தெந்த துறைகளில் நஷ்டம் அடைகிறீர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். சிலருக்கு தேவையற்ற சலுகைகள் கிடைக்கும். தேவையில்லாமல் பணம் பெறுகிறார்கள். இது போன்ற விஷயங்களை நிர்வகிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். இறுதி முடிவை எடுப்பதற்கு முன் பல விஷயங்கள் உள்ளன. அந்த விஷயங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நஷ்டம் என்றால் என்ன, இழப்புக்கான காரணம் என்ன? தீர்வு இல்லை என்றால், தனியார்மயம் என்று சொல்வதை செயல்படுத்தலாம்.

(8) பொருளாதார நெருக்கடி பற்றிய புரிதல் இல்லாமை பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதில் சிக்கலாக மாறுகிறதா?

ஒவ்வொருவரும் தொடர்ந்து அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அரசியல் பிரகடனங்கள் இன்றி தற்போதுள்ள அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய நேர்மையாக முயற்சி செய்தால், எதிர்க்கட்சிகளும் ஏனைய கட்சிகளும் அதற்கு உதவும். ஆனால் தற்போது சந்தர்ப்பவாத காரியங்களையே அனைவரும் மேற்கொள்கிறார்கள். அவ்வாறில்லாமல் அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சித்தால் அனைத்து மக்களும் இணைவார்கள்.

சந்தர்ப்பவாத அரசியல் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் உதவுங்கள்.

நெத்மி பூஜானி ரத்நாயக்க 
தமிழில்: வீ.ஆர்.வயலட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT