Saturday, May 11, 2024
Home » தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை கண்காணிக்கும் அமைச்சரவைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை கண்காணிக்கும் அமைச்சரவைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

by Prashahini
March 12, 2024 7:09 pm 0 comment

இன்றைய பொருளாதார மாற்றத்திற்கு கல்வி இன்றியமையாத அங்கமாகும் என்பதை அறிந்து, கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்தக் குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட 08 அமைச்சர்கள் உள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கைக் கட்டமைப்பில் குறுகிய கால மற்றும் இடைக்கால கல்வி மாற்றத்துக்கான செயல்முறைகளைக் கொண்டுள்ளது. மேலும், கல்வித் துறையில் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமானதும்,விரைவானதுமான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

ஆசிரியர் சான்றளிப்பு முறையை நிறுவுதல், உட்பட ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்முறைகள் மற்றும் ஆசிரியர் சேவை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளுதல், தொழில்முறைச் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களின் தொடர்ச்சியான பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய ஆசிரியர் சபையினை (National Council for Teachers) நிறுவுவதற்கான சட்டமூலம் ஒரு மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆசிரியர் தொழிலை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாற்றுதல், ஆசிரியர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கான ஒரு சரியான தொழில்முறை பாதையை வடிவமைத்தல் (professional pathway) உள்ளிட்ட சிறந்த முறையிலான தொழில்முறைக் கட்டமைப்பை உருவாக்குதல், வளர்ந்து வரும் தொழில் தரநிலைகளுக்கு ஏற்ப ஆசிரியர் சம்பளக் கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் சிறந்த முறையில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைத் தெரிவு செய்து விருதுகளை வழங்கும் செயற்பாடுகளை மேற்படி சபை முன்னெடுக்கும்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைகளில் 08 பாடங்களையும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் 24 ஆண்டுகள் ஆகி இன்றும் 765 பாடசாலைகளில் மட்டுமே ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர சமூகத்தில் பெரும் கேள்வி நிலவுகிறது. எனவே அதற்கான பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பிலான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 200,000 மாணவர்கள் ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர முடியும்.

இப்பணியைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக 2500 புதிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்ததுடன், இச்செயற்பாட்டினைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அறிந்து ஆங்கில மொழியில் பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை 3 வருட ஒப்பந்த கால அடிப்படையில் விரைவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிவுறுத்தினார். மேலும் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆங்கில மொழியில் கற்பிக்கக்கூடிய 1,100 பட்டதாரிகளை படிப்படியாக சேவையில் இணைத்துகொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.

தற்போது கல்வியற் கல்லூரிகளில் ஆங்கில மொழியில் கல்வியைப் பெற்று பட்டம் பெறவிருக்கும் 400 ஆசிரியர்களும் இதற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

கனிஷ்ட இடைநிலைக் கல்வி மற்றும் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த மாணவர்கள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து வௌியேறும் போது, பாடசாலை நற்சான்றுப் பத்திரத்திற்கு மேலதிகமாக பாடசாலையில் வௌிப்படுத்திய பல்வேறு திறன்களை அங்கிகரிப்பதற்கான எந்தவொரு உறுதிப்படுத்தல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே, இவ்வருடம் முதல் அமுலாகும் வகையில், தேசியக் கல்விச் சான்றிதழ்களுக்கு மேலதிகமாக மாணவர்கள் பாடசாலை கல்வியை நிறைவுச் செய்தமைக்கான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும்.

இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்டவர்களுடன் கல்வி துறைசார் உயர் மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT