Sunday, May 12, 2024
Home » கேலிச்சித்திர கலைஞர்கள் ஜனாதிபதியை நோக்கிய விதம் “Press Vs Prez” நூல் வௌியீடு

கேலிச்சித்திர கலைஞர்கள் ஜனாதிபதியை நோக்கிய விதம் “Press Vs Prez” நூல் வௌியீடு

- இவ்வாறான படைப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம்!

by Rizwan Segu Mohideen
March 8, 2024 12:44 pm 0 comment

கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07) கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் இந்த நூல் வௌியிடப்பட்டது.

இவ்வாறான தொகுப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும் எனவும், அதனால் நாட்டில் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

சர்வாதிகார ஆட்சியில் இவ்வாறான படைப்புகள் ஒருபோதும் பிறக்காது என்றும், குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியமை குறித்து பெருமையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி பதவியில்‌ இருந்து என்னை வெளியேற்றியதன் சதி”

கடந்த காலங்களில் அரசாங்கம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும், ஒரு நாடாக நாம் இக்கட்டான காலத்தின் கடைசி பகுதியில் இருக்கிறோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இக்கட்டான காலத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த, இந்தக் கேலிச்சித்திர படைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய படைபாளிகள் அனைருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 9 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக 2021 ஜூன் 23 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, மே 2023 வரையிலான அவரது பயணம் குறித்து, நாளிதழ்களில் வெளியான 618 கேலிச்சித்திரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார்.

அத்துடன் 40 கேலிச்சித்திர கலைஞர்கள் மற்றும் 20 ஊடகவியலாளர்கள் இந்த படைப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவற்றை தொலைக்காட்சியின் ஊடாக வௌியிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய புகழ்பெற்ற கேலிச்சித்திர கலைஞர் நள பொன்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் ரொஹான் நெட்டசிங்கவால் நூல் பற்றிய விமர்சன விரிவுரையை நிகழ்த்தப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த கேலிச்சித்திரங்களின் தொகுப்பு ஒரு பாரம்பரிய பணியை நிறைவேற்றியுள்ளது. ஜே.ஆர் ஜயவர்த்தன, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரின் வீடுகளில் இவ்வாறான தொகுப்புக்களைக் கண்டிருக்கிறேன். அதனால் இன்று வஜீரவும் அவ்வாறான சம்பிரதாயபூர்வமான பணியை நிறைவேற்றியுள்ளார்.

இந்த தொகுப்பில் குறிப்பிடப்படும் 2021-2023 காலகட்டத்தை இப்போது மறந்துவிட்டோம். நான் பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சி இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன். அந்த நேரத்தில் சத்தியப்பிரமானம் செய்ய இடமிருக்கவில்லை. அரச அலுவலகங்களில் செய்தால் அதற்கு தீ மூட்டிவிடுவார்கள் என்ற அச்சம் காணப்பட்டது.

பின்னர் பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு வாலுக்காராமய விகாரையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். அப்போது நாட்டின் நிலைமை அவ்வாறானதாக இருந்தது. வன்முறைக் கும்பல் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டது. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது.

மேலும், நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மாத்திரம் 2000 கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. நாம் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தியிருந்தால் அத்தகைய படைப்புகள் பிறந்திருக்காது. இவ்வாறான படைப்புக்கள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும். அவதூறு சட்டத்தில் இருந்து விடுபட முடிந்ததில் பெருமை கொள்கிறேன்.

இன்று புத்தகங்கள் எழுதலாம். தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என எந்த வகையிலும் படைப்புக்களை உருவாக்கலாம். அந்த சுதந்திரம் இருக்கிறது. 1931 இல் இந்த நாட்டில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த நாட்டில் ஜனநாயக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகளைத் தடை செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ஒரு தேர்தலுக்குப் பிறகு முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆட்சியை விட்டு வெளியேறினர். ஆசியாவிலேயே இப்படி நடந்த ஒரே நாடு இலங்கைதான். நம்மிடையே எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஜனநாயகத்தை மதிக்கிறோம்.

இந்த கார்ட்டூன்கள் அனைத்தும் நாட்டில் உள்ள சுதந்திரத்தைக் காட்டுகின்றன. இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் போதும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் குறையப்போதவில்லை. மாறாக அவை அதிகரிக்கும். இந்த ஜனநாயக சுதந்திரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நான் மிகவும் கடினமான நேரத்தில் நாட்டைக் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாட்டின் அரசியல் சரிவடைந்து கிடந்தது. ஆனால், எம்மால் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டோம். அந்த ஜனநாயகத்தையே இந்த சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன.

இந்தக் காலப்பகுதியில் நாம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்தது. நாம் எதிர்கொள்ளும் கடினமான காலத்தின் கடைசிப் பகுதி இதுவாகும். இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். நாங்கள் இதுவரை செய்த அனைத்து செயற்பாடுகளும் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்டனர். எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் குழுவின் தீர்மானங்களுக்கமைய, தனியார் கடன் வழங்குநர்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தின் கடன் தொடர்பான கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். அதன்படி, அந்த யோசனைகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதித்து அவர்களின் இறுதி முடிவின்படி செயல்பட எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட முடியும். எனவே, அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

இந்த இக்கட்டான காலங்களில் இந்த கேலிச்சித்திரங்கள் எமக்கு நிவாரணமாக அமைந்தன. அதனால் வாழ்க்கையை எளிதாகப் பார்க்க முடிந்தது. இப்போது நாம் அனைவரும் நிலையான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நான் நம்புகிறேன். அதேபோல் கேலிச்சித்திரக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்திய கேலிச்சித்திர கலைஞர் நல பொன்னப்பா கருத்து தெரிவிக்கையில்.

”இந்நூலில் ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் மிகச் சிறப்பாகச் காண்பித்துள்ளனர்.

அரசியல்வாதிகளும் மனிதர்களே! எனவே உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் தங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் எது சிறந்தது என்பதை அறிவார்கள். கேலிச்சித்திர கலைஞர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகபட்ச சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதற்கேற்ப தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். இங்கு கூடியிருப்போரைப் பார்க்கும்போது, ​​ஜனநாயகம் என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புத்தகம் நாடவாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு அரசியல் கேலிச்சித்திர வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த சவாலான காலகட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பயணம் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் நூறு கேலிச்சித்திரக் கலைஞர்களின் பார்வைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட 618 கேலிச் சித்திரங்கள் உள்ளன. இந்நூல் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், பிரகாசமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அதேபோல் கேலிச்சித்திரங்களை வரைந்திருக்கும் கலைஞர்கள் மிகவும் சாதகமான முறையில் எதிர்கால சந்ததிக்காக அவர்களின் பணிகளை செய்துள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் ரொஹான் நெத்சிங்க,

”இலங்கையின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முதல் பெண்மணி என்ற முறையில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது நன்றாகவே தெரியும்.

கேலிச்சித்திர கலைஞர்கள் முதுகெலும்பு உள்ளவர்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று யாருக்காவது தெரிந்திருந்தால், இன்று போன்ற ஒரு நாளில் எங்களை இங்கு அழைத்திருக்க மாட்டார்கள். இந்த அழைப்பை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது என்றார்கள். ஆனால் அதற்கு மாறான விடயமே நடந்தது. உங்கள் திறமையாலேயே இந்த பணிகளை செய்துள்ளீர்கள் என்பதை ஜனாதிபதி நன்கறிவார். அதனாலேயே உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சில நேரங்களில் இந்த கேலிச்சித்திர கலைஞர்கள் செய்யும் கடுமையான விமர்சனங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. ஆனால் நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஜனாதிபதி தனது அறிவையும் திறமையையும் கூர்மைப்படுத்தியவர். அதுவே இன்று அவருக்கு வலுவாக அமைந்துள்ளது.

உங்களின் தலைமைத்துவத்திற்கும், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பிரார்த்திப்பதோடு நல்வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.” என்று தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாக்களும் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT