Monday, May 20, 2024
Home » சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அதிகமானோருக்கு காணி ஆவணம்
ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம்,

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் அதிகமானோருக்கு காணி ஆவணம்

by mahesh
March 6, 2024 8:12 am 0 comment

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட யோசனைக்கமைவாக, நிபந்தனைகளற்ற பூரண காணி ஆவணம் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் தற்பொழுது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நிபந்தனைகளுடன் கூடிய காணி ஆவணங்களினால் சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு, நிபந்தனைகளற்ற காணி ஆவணம் வழங்குவதானது அவர்களின் மனங்களில் நிம்மதி தருகின்றது. இவ்வேலைத்திட்டத்தின் மூலம்மக்கள் இன, மத, மொழி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளின்றி பெரிதும் நன்மையடைந்து வருகின்றனர்.

தேசிய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தம்புள்ளையில் அண்மையில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முதலாவது காணி ஆவணம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி குழந்தை உம்மாவுக்கு வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலக காணிப்பிரிவு துரிதமாகச் செயற்பட்டு, உரிய காணி ஆவணங்களை காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு முதன்முறையாக அனுப்பி வைத்ததன் பயனாக இது சாத்தியமாகியுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, காணிக்கிளை உத்தியோகத்தர்கள், நிலஅளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பயனாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அதிகமான தொகையினர் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நன்மையடைந்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி, விருதுகளையும், பாராட்டினையும் பெற்றுவரும் சம்மாந்துறை பிரதேச செயலகம், காணி உறுதி வழங்கும் வேலைத்திட்டத்திலும் சாதனை நிலைநாட்டியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

காணி கொள்கை மாற்ற வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தில், நாட்டில் மொத்தம் 10ஆயிரம் நிபந்தனைகளற்ற பூரண காணி ஆவணம் வழங்கும் இவ்வேலைத்திட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மாத்திரம் 711 ஆவணங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இத்தொகையில் மொத்தம் 679 பேர் உடனடியாக நன்மையடையும் வாய்ப்பேற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவ்வப்போது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கவுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் கடந்த வருடம் நடைபெற்ற சமூகப் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சமூகப் பாதுகாப்பு விருதினை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா பெற்றுக் கொண்டார். அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் கடவுச் சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல் அடையாள கைரேகை பதிவு செய்யும் பணி சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடந்தவருடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முகம்மட் றிஸான் (அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT