Monday, May 20, 2024
Home » நெற்செய்கையை கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

நெற்செய்கையை கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

by manjula
March 5, 2024 8:32 am 0 comment

தெற்காசியப் பிராந்தியத்தில் நெற்செய்கைக்குப் பிரசித்தி பெற்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். நெற்செய்கைக்கு அவசியமான சீதோஷண நிலை உள்ளிட்ட இயற்கை வளங்களை இந்நாடு தாராளமாகவே பெற்றுக் கொண்டுள்ளது. அதன் பயனாக ஆரம்பகாலம் முதல் நெற்செய்கைக்கு பிரசித்தி பெற்ற நாடாக விளங்குகிறது இலங்கை. இந்நிலையில் தெற்காசியாவின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட இந்நாடு, ஒரு காலத்தில் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.

நெற்செய்கைக்குத் தேவையான வளங்களை இயற்கையாகவே பெற்றுக் கொண்டுள்ளதன் பயனாக இந்நாடு தனித்துவமான நீர்ப்பாசன கலாசாரத்தை உலகுக்கு வழங்கியுள்ளது. அதாவது இந்நாட்டின் ஒவ்வொரு நெற்செய்கைப் பிரதேசமும் குளத்தையும் அதனை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன கால்வாய்க் கட்டமைப்பையும் சமய வழிபாட்டுத் தளத்தையும் வயல்வெளியையும் கொண்டதாக இருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறான நீர்ப்பாசன மற்றும் மதவழிபாட்டு கட்டமைப்பை வேறு நாடுகளில் மிக அரிதாகவே அவதானிக்க முடிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நெற்செய்கை தொடர்பில் இவ்வாறு தனித்துவம்மிக்க சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள போதிலும் இந்நாடு வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்த சந்தர்ப்பங்களும் உள்ளன. குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்வந்த காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு பாவனையாளருக்கு விநியோகிக்கும் நிலைமை ஏற்பட்டது.

அதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் நெற்செய்கைக்கு இயற்கைப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டு செயற்கைப் பசளைப் பாவனைக்கும் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. இயற்கைப் பசளை பாவனையை ஊக்குவிக்கவென பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இத்திட்டங்களுக்கு கமத்தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தோடு பெரும்பாலான விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுவதையே தவிர்த்துக் கொண்டனர். இருப்பினும் இயற்கைப் பசளை பாவனைக்கு அளிக்கப்பட்ட ஊக்குவிப்பின் அடிப்படையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளும் நஷ்டத்திற்கே உள்ளாகினர்.

இந்தப் பின்னணியில் பாவனையாளர்களுக்காக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு உள்ளானது. 2022 ஆம் ஆண்டின் ஜுலை மாதப் பிற்பகுதியில் நாட்டின் தலைமைப் பதவியை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக இரசாயனப் பசளையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததோடு அவை நெற்செய்கையாளர்களுக்கு விரைவாகக் கிடைக்கப்பெறவும் ஏற்பாடு செய்தார். அத்தோடு கமக்காரர்களின் நெல்அறுவடைக்கு அதிகபட்ச உத்தரவாத விலையை அளித்ததோடு அவற்றை கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகளை முன்னெடுத்தார். மேலும் வேளாண்மைச் செய்கையாளர்கள் மானிய அடிப்படையில் இரசாயனப் பசளையைப் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணமும் வைப்பிலிடப்பட்டது.

இவ்வாறான ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பிரதிபலனாக கமத்தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டன. அவர்கள் நம்பிக்கையுடன் நெற்செய்கையில் ஈடுபடலாயினர். இதன் பயனாக குறுகிய காலப்பகுதியில் நாட்டுக்கு தேவையான நெல் உள்நாட்டிலேயே அறுவடையாகும் நிலைமை உருவானது. அதன் காரணத்தினால் அரசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை முடிவுக்கு வந்தது. 2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் கமத்தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாடு அடைந்துள்ளது.

இந்நிலையில், ‘ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் அடங்கலாக பல நாடுகளில் இலங்கை அரிசிக்கு கேள்வி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விவசாய அமைச்சர், கென்யாவில் இருந்து 10 மெற்றிக் தொன் அரசிக்கு கேள்வி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இலங்கையருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்நாட்டை மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது போன்று மீண்டும் அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடிய சூழல் உருவாகி வருகின்றது. அதனால் இந்நாட்டு அரிசிக்கு பல நாடுகளிலும் ஏற்பட்டுவரும் கேள்வி அதிகரிப்புக்கு ஏற்ப அதனை விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அப்போது உலகுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் மற்றொரு நாடாக இந்நாடு பதிவாகும். அத்தோடு மீண்டும் அரிசி ஏற்றுமதிக்குள் பிரவேசிக்கும் இந்நாடு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறையாகவும் மாற்றமடையும். அதனால் தற்போதைய சந்தர்ப்பத்தை உச்சளவில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்நாட்டு நெற்செய்கையைக் கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT