Tuesday, May 21, 2024
Home » பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத்கீதை ஒரு மருத்துவ களஞ்சியம்

பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத்கீதை ஒரு மருத்துவ களஞ்சியம்

by damith
March 4, 2024 10:17 am 0 comment
இந்தியாவிலுள்ள ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் நடத்தப்படும் கீதா மஹோற்சவம் அண்மையில் மூன்று நாட்களான கொழும்பு 07, தாமரைத் தடாக மண்டபத்தி்ல் நடைபெற்றது. இதில் முதல் நாள் சித்திரம் வரையும் போட்டியும் ரங்கோலி கோலப் போட்டியும் விநோத உடை போட்டி என்பன நடைபெற்றன. இரண்டாம் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மதகுருமார்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கிளார்கள். மூன்றாம் நாளாகிய கடந்த சனிக்கிழமை அறநெறி பாடசாலை மாணவ மாணவிகளின் நடன நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. புத்த சாசன சமய கலாசார அமைச்சு, இந்து சமய கலாசார திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்து நடத்தினார்கள். இதில் இரண்டாவது நாளில் இடம்பெற்ற கருத்தரங்கின்போது- பிடிக்கப்பட்ட படங்களை காணலாம்.

பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதையில் நம் வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்லப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று மருத்துவம். உடல் மனம் புத்தி அறிவு, ஆன்மா ஆகிய அனைத்திலும் ஆரோக்கியமாக உள்ள மனிதர்களால் மட்டுமே ஆரோக்கியமான குடும்பமும், ஆரோக்கியமான தேசமும் உருவாகும் எனவே கிருஷ்ணர் தன் கீதையில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

நம் பாரம்பரிய மருத்துவங்களில் பஞ்ச பூதங்களுக்கும் அவற்றின் கலப்பினால் உருவாகும் வாதம், பித்தம், கபமாகிய முத்தோஷங்களும் தான் அடிப்படை. உடல் நோய்கள் மட்டுமல்ல மனநோய்களும்கூட இந்த முறைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டே இன்றுவரை மருத்துவம் செய்யப்படுகிறது. இந்த மூன்று தோஷங்களின் கலப்பினால் மனிதர்களுக்கு உருவாகும் சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் மிகுதி குறைவினால் வரும் இன்ப துன்பங்கள், செயல்பாடுகள், அதனை சரி செய்ய தேவையான உணவு பழக்கவழக்கங்கள், யோகம், தூக்கம், கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகள் போன்றவற்றை “அர்ஜுனா விஞ்ஞானத்துடன் கூடிய ஞானத்தை கேட்டு நலம் பெறுவாய்” என கீதையில் கிருஷ்ணர் விளக்குகிறார். அத்துடன் மட்டுமல்ல “நான் மருந்தாக ராஜயோகத்தை சொல்கிறேன் கேள், இது நலம் தரக்கூடியது, செய்வதற்கு எளிதானது, கண்கூடாக காணக்கூடியது, சிறிது கடைபிடித்தாலும் பெரும் துன்பத்தில் இருந்து காக்கக்கூடியது” என அதற்கான மனப்பயிற்சியையும் சேர்த்தே நமக்கு சொல்கிறார். கீதையை பொருள் புரிந்து படித்தால் அது நம் அன்றாட வாழ்விற்கு தேவையான உணவு, வாழ்க்கை முறை, மனநலம், ஆன்மீகம் போன்ற பல விஷயங்களை பற்றிய ஆழ்ந்த அறிவை கொடுத்து நம்மை மனிதனில் இருந்து தெய்வமாக உயர்த்தும்.

கீதையை பொருள் புரியாமல் கேட்டாலும், படித்தாலும்கூட அதன் ஸ்லோகங்களில் உள்ள நுண்ணிய அதிர்வலைகள் நம் உடலிலும், மனதிலும் பரவி நமது பஞ்சகோசங்களிலும் வியத்தகும் வகையில் பல நல்ல மாறுதல்களை உருவாக்குகின்றன.

டி ஆர் ஷேஷாத்ரி எழுதியுள்ள “The Curative Power Of The Holy Gita” எனும் புத்தகத்தில் பகவத் கீதையை தினமும் படிப்பதால் உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவை எப்படி நலம் பெறுகின்றன என்பதை பல ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்குகிறார். பகவத் கீதை சர்க்கரை நோய் உட்பட பல வாழ்க்கை முறை மாற்றத்தினால் வரும் நோய்களுக்கு நல்ல தீர்வாகிறது என சமீபத்தில் உஸ்மானியா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த டாக்கா மருத்துவ கல்லூரி, மிட்போர்டு மருத்துவமனை, பாகிஸ்தானை சேர்ந்த கான் மருத்துவ பல்கலைக்கழகம் போன்றவையும் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவருக்கு கீதை :

கீதையில் உள்ள ஆரோக்கிய வழிமுறைகள் நோயாளிகளுக்கு மட்டும் தீர்வு தரவில்லை அது மருத்துவர்களுக்கும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கீதையில் உள்ள 3:8, 3:9, 3:16, 3;21, 3:26, 3:33, 4:3, 4:10, 4:17, 4:18, 4:22, 4:28, 4:34, 4:38, 4:39, 5:2, 5:12, 5:14, 5:4, 5:23, 5:27, 5:28, 6:1, 6:5, 6:9, 6:13, 6:16, 10:11, 11:33, 12:13, 12:14, 13:7, 18:7, 18:56, 18:57, 18;63, போன்ற அத்தியாங்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு மருத்துவர் எப்படி செயல்பட வேண்டும், சேவையின் முக்கியத்துவம், எப்படி நோயையும் நோயாளிகளையும் அணுக வேண்டும், கீதையின் அடிப்படையில் மருத்துவம், நிர்வாகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பகவத் கீதை ஒரு ஆன்மீக நூல் மட்டுமல்ல இது உலக மக்களின் இக வாழ்விற்கும் பரலோக வாழ்விற்கும் வழிகாட்ட இறைவனால் வழங்கப்பட்ட உலகின் உன்னத குரு. கீதை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பொக்கிஷமாக பாதுக்காக்கப்பட்டு அனைவரும் தினமும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT