Monday, May 13, 2024
Home » 1,125 பவுண் தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது

1,125 பவுண் தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது

- வங்கி அட்டை போன்று 20 தங்கத் தகடுகள்

by Rizwan Segu Mohideen
March 4, 2024 2:38 pm 0 comment

– காப்பு, மாலை, மோதிரம் என பல நகைகள்
– பல நாள் திருட்டு இன்று அம்பலம்

சுமார் ரூ. 20 கோடி பெறுமதியான 9 கிலோ கிராம் நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று (04) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீண்ட காலமாக விமான நிலைய ஊழியர்கள் சிலருடன் இணைந்து இந்த கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளதாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விமான நிலைய ஊழியர் கட்டுநாயக்க விமான நிலைய முனைய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சிற்றூழியர் ஆவார். சந்தேகநபருக்கு இன்று பணி நாள் அல்லாத போதிலும், விமான நிலையத்திற்குள் நுழைந்து இந்த நகைகளை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

இன்று (04) காலை 8.15 மணியளவில் இந்த நகைகள் அடங்கிய பொதியை, விமான நிலைய புறப்படும் முனையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகாமையில் வெளியேற்றுவதற்காக எடுத்துச் சென்ற போது, சந்தேகநமடைந்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயம் மற்றும் பொதுமக்கள் பகுதியை பிரிக்க இடப்பட்டிருக்கும் இரும்புக் கதவில் பொருத்தப்பட்டிருந்த நாடாக்களை அகற்றி, இந்த நகைகள் அடங்கிய பொதியை முதலில் வெளியே எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த பொதியில், வங்கி அட்டைகள் போன்று தங்கத்தால் செய்யப்பட்ட 20 அட்டைகள், 12 தங்க ஜெல் கெப்சூல்கள், 2 தங்க ஜெல் பட்டிகள், காப்புகள், மாலைகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், காதணிகள் என பல்வேறு நகைகளும் உள்ளடங்குகின்றன.

இவ்வாறு கைப்பற்றிய தங்கங்களை பார்வையிடுவதற்காக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வளாகத்திற்கு வந்திருந்ததோடு, சுங்க அதிகாரிகளின் பணிகளை அவர் பாராட்டியிருந்தார்.

சந்தேகநபரான விமான நிலைய ஊழியரையும், அவர் எடுத்துச் செல்ல முயன்ற தங்கங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT