Wednesday, May 15, 2024
Home » இந்தியாவில் இடம்பெற்ற இராமாயணம் சித்திரகாவிய கண்காட்சி

இந்தியாவில் இடம்பெற்ற இராமாயணம் சித்திரகாவிய கண்காட்சி

- நிகழ்வில் சிறப்பு அதிதியாக அமைச்சர் ஜீவன் பங்கேற்பு

by Prashahini
March 3, 2024 3:25 pm 0 comment

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இலங்கை மக்களின் நலன்கருதி இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளையும், மலையக மக்களுக்காக இந்தியா வழங்கி வரும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமாட்டோம். கொழும்பு – டில்லி உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுவேன் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இராமாயணம் சித்திரகாவியம் எனும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இராமாயண காவியத்தின் புகழை உலகறிய செய்யும் நோக்கில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணக்கருவுக்கமைய, இந்திய கலாசார அமைச்சின் ஏற்பாட்டிலேயே இந்நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடைபெற்ற இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய ஒன்றிய அரசின் இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் அழைப்பையேற்று சிறப்பு அதிதியாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து சிறப்பித்தார்.

ஆன்மீக தலைவர்கள், ஆன்மீக செயற்பாட்டாளர்கள், இந்திய ஒன்றிய அரசின் இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிநாட்டு தூதுவர்கள், இந்திய அரச அதிகாரிகள், இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் ஷேனுகா செனவிரத்ன மற்றும் அதிகாரிகள், இலங்கையிலிருந்து அமைச்சருடன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தராஜன், அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, பிரத்யேக செயலாளர் மொஹமட் காதர், இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“ இலங்கை, இந்திய உறவு பல நூற்றாண்டுகளாக பலமாகவே உள்ளது. நெருக்கடி ஏற்பட்டபோது கூட இந்தியா தான் முதலாவதாக நேசக்கரம் நீட்டியது. இதனை நாம் மறக்கமட்டோம்.இராமாயணத்துடன் தொடர்புபட்ட முக்கியமான புனித தலங்கள் நான் பிரதிநிதித்துவப்படுத்தும், மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளன. இதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் திட்டம் வகுத்து வருகின்றோம். இராமாயணம் சித்திரகாவியம் நிகழ்வு இந்தியாவுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கும் மிக முக்கியம்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு நான் முன்னின்று செயற்படுவேன்.” – என்றார்.

அதேவேளை, அருங்காட்சியகம் அரங்கை அமைச்சர் திறந்து வைத்ததுடன், புகைப்பட கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT