Sunday, May 19, 2024
Home » இந்து சமுத்திர கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்தும்

இந்து சமுத்திர கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்தும்

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி----

by Gayan Abeykoon
March 1, 2024 9:40 am 0 comment

 இந்து சமுத்திர கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பிராந்திய நாடுகளிடையில்  அதிகார மோதலைத் தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடல்சார் செயற்பாடுகளின் சுதந்திரத்துக்காக இலங்கை அர்ப்பணிப்புடன்   செயற்படுவதாலேயே செங்கடல் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு  வழங்க  முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகார மோதல்கள் இன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாடுகளை பேணுவதில் இலங்கை அர்பணிப்புடன் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாத் பைண்டர் மன்றம்  ஏற்பாடு செய்த இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டின்  மூன்றாம்  கட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் (28)  நடைபெற்றது.இரு நாள் மாநாட்டில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இதில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆறு நாள் யுத்தத்தின் விளைவாக சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் பாதிப்புற்றன.

இதனால், வரையறையின்றிய  கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த அமர்வை ஏற்பாடு செய்தமைக்கும் வலயத்தின் பாதுகாப்பு தொடர்பில் காண்பிக்கும் தொடர்ச்சியான அக்கறைக்கும் மிலிந்த மொரகொடவுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.  ஒரே தடம் – ஒரே பாதை வேலைத்திட்டம் அல்லது இந்து – பசுபிக் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தை பார்க்க முடியாது. இந்து சமுத்திரம் தற்காலத்தில் உலக மூலோபாய அரசியல் வலயமாக மாறியுள்ளது. கடந்த 5 – 6 வருடங்களிலேயே  இது நிகழ்ந்துள்ளது. இதுவரையான நிகழ்வுகளில் அதனை நாம் உறுதிப்படுத்த முடியும்.

அதேபோல் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக உருவெடுக்கப்போகிறது. 21 ஆவது நூற்றாண்டின் இறுதி வரையிலும் இந்தியாவின் வர்த்தக சந்தை விரிவடையும்.

இந்துனேசியாவும் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது.    இதன்படி இந்து சமுத்திர  வலயம் தற்போது எழுச்சி காணும் பொருளாதார வலயமாக மாறியுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் அதிகார மோதல்கள் அற்ற இந்து சமுத்திரத்தின் கப்பல் செயற்பாடுகளின் சுதந்திரத்தை மூலோபாய நிலைப்பாட்டிற்காக இலங்கை அர்பணிப்புடன் செயற்படும் என்றார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT