நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா மற்றும் அதன் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன் இணைந்து அதன் சமூக அபிவிருத்தி திட்ட பணியை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது.
இதுதொடர்பான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலக அதிசய மண்டபத்தில் லைக்கா, ஞானம் பவுண்டேஷன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட கலந்து கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிக்கான ஆரம்ப நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ‘லைக்கா மற்றும் ஞானம் பவுண்டேஷன் சர்வதேச இணைப்பதிகாரி சைத்தனியா, மாவட்டத்தின் செயற்றிட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன்,நுவரெலியா மாவட்ட அபிவிருத்தித் திட்ட இணைப்பதிகாரி எம்.என்.யூசுப் ஆகியோருடன் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேசத்தில் இலங்கை உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் ‘லைக்கா, ஞானம் பவுண்டேஷன்’ இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேச மக்களின் வேண்டு கோளுக்கமைய சமூக அபிவிருத்தி பணிகளை அரசசார்பற்ற நிறுவனமாக செய்துவருகின்றது.
இந்நிலையில் மலையக சமூகத்துக்கும் அபிவிருத்தி தேவைப்பாடுகள் உள்ளமையால் நுவரெலியா மாவட்ட செயலாளரின் அழைப்புக்கமைய நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக “லைக்கா, ஞானம் பவுண்டேஷன்” முன்னெடுக்கவுள்ள சமூக அபிவிருத்தி பணியை அங்குரார்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.இதனூடாக கல்வி,வாழ்வாதாரம், குடியிருப்பு வசதிகள்,சுகாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு வசதிகள் என சமூக தேவைப்பாடு உணர்ந்து அதற்கான அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயற்றிட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ரமேஷ்