Friday, June 21, 2024
Home » நவீன தொழில்நுட்பத்துடன் கலைஞர் உலகம் அருங்காட்சியகம் நிர்மாணம்

நவீன தொழில்நுட்பத்துடன் கலைஞர் உலகம் அருங்காட்சியகம் நிர்மாணம்

by Prashahini
February 26, 2024 9:17 am 0 comment

தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லா பெருமைகளை தரணியில் உயர்த்தி, நிலைநாட்டிய ஒப்பிலாத் தலைவர்களான அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (26) மாலை 7.00 மணி அளவில் திறந்து வைக்கிறார்.

கருணாநிதி நினைவிட வளாகத்தில் உள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ஆம் திகதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மொத்தம் 8.57 ஏக்கரில் அமைந்துள்ளன. இதன் நுழைவுவாயிலை கடந்து சென்றதும், அண்ணா, இளங்கோவடிகள், கம்பர் சிலைகளும், அண்ணா அருங்காட்சியகமும் உள்ளது.

அண்ணா சதுக்கத்தை கடந்ததும், கருணாநிதி சிலை அமைந்துள்ளது. ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகத்துடன் கருணாநிதி சதுக்கம் அமைந்துள்ளது. தமிழை செம்மொழி என மத்திய அரசு ஏற்றதை பாராட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா எழுதிய கடிதம் தமிழ், ஆங்கிலத்தில் புத்தக வடிவில் வைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் பின்புறம், வியட்நாம் மார்பிள் சுவரில் வண்ண கற்களால் கருணாநிதி முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இரவில் இந்த சுவரின் பின்னால் ஒளிரும் விளக்கு மூலம், கருணாநிதி உருவம் முழுமையாக ஒளி வெள்ளத்தில் தெரியும் வகையிலும், சுற்றிலும் பொன்னிறத்தில் நட்சத்திரங்கள் தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சதுக்கத்தின் கீழே நிலவறை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சாதனை திட்டங்கள், முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘உரிமை போராளி கலைஞர்’ என்ற அறையில், சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றலாம் என்ற உரிமையை பெற்றுத் தந்து, முதல்முதலாக கொடியேற்றி அவர் பேசியது, அவரது அங்க அசைவுடன் தத்ரூபமாக, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது, கருணாநிதியின் 8 நூல்களின் பெயர் மீது கைவைத்தால், அந்த நூல் பற்றிய வீடியோ விளக்கம் கிடைப்பது ஆகிய வசதிகளும் உள்ளன.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படக்காட்சிகளாக காட்டும் ‘அரசியல் கலை அறிஞர் கலைஞர்’ எனும் சிறிய திரையரங்கம், 7டி தொழில்நுட்பத்தில் காண்பிக்கும் ‘சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்’ என்ற தலைப்பிலான ரயில் பெட்டி போன்ற அறை ஆகியவையும் இங்கு உள்ள சுவாரஸ்யமான அம்சங்கள். மற்றொரு அறையில், கருணாநிதியின் அருகில் அமர்ந்து அவரது பேச்சை கேட்கும் வகையிலும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கருணாநிதி சதுக்கத்தின் பின்புறம், பொதுமக்கள் அமர்ந்து கடலை ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பதிவு அவசியம்: இந்த நினைவிடம் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசியபோது, “பெப்ரவரி 26ஆம் திகதி திறந்து வைக்கப்படும் நினைவிடம், ஒரு வாரத்தில் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் ஒரு நேரத்தில் 200 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்த நினைவிடங்களை பொதுப்பணித் துறையே தொடர்ந்து பராமரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT