திறமையான, நட்பான மற்றும் பொறுப்புவாய்ந்த அரசாங்க சேவையை உருவாக்க நிறுவன மட்டத்தில் திட்டங்களைத் தயாரிக்கவும் – வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கோரிக்கை
பொறுப்புவாய்ந்த மற்றும் திறந்த அரசாங்க சேவையை வழங்குவதன் ஊடாக மாத்திரமே பொதுமக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க முடியும் என ‘திறமையான மற்றும் பொறுப்புவாய்ந்த அரசாங்க சேவை’ என்ற தொனிப்பொருளில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பொதுமனுக்கள் குழு உள்ளிட்ட குழுக்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குழுவின் அமர்வு முடிவடைந்து வெளியேறிய பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தவறுவது பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்திராரச்சி தலைமையிலான வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இந்த செயலமர்வை நேற்றையதினம் (19) ஏற்பாடு செய்திருந்தது.
திறமையான, நட்பான மற்றும் பொறுப்புவாய்ந்த அரசாங்க சேவையை உருவாக்க நிறுவன மட்டத்தில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமித்திராரச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர குறிப்பிடுகையில், நாட்டில் தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றைத் தேடுவதற்கும், அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைத்து, எதிர்பார்த்த நட்பான, வினைத்திறன் மற்றும் பொது மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கு இந்தச் செயலமர்வு உறுதுணையாக இருக்கும் என்றார்.
இச்செயலர்வில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சந்தன குமாரசிங்க, பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆணையர் (ஒம்புட்ஸ்மேன்) கே.பி.கே. ஹிரிபுரேகம, ஸ்ரீபாலி பல்கலைக்கழகத்தின் மண்டபாதிபதி பிரதிபா மஹாநாமஹேவா, ஓய்வூதியத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.ஏ. திலகரத்ன ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். இது தவிரவும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள், சபைகள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றின் பிரதானிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.