தம்புள்ளையில் இன்று (19) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய அதிகளவிலான விளையாட்டு ரசிகர்கள் வருகை தந்ததால் தம்புள்ளை பிரதேச செயலகத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் வாயிலில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியானது தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த போட்டியினை பார்வையிடுவதற்கான டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ள இரசிகர்கள் முற்பட்ட வேளையில் இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
பதற்றமான நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பெரிதும் போரடினர்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளதாவது,
2 ஆவது மற்றும் 3 ஆவது டி 20 போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
தம்புள்ளை மைதானத்தில் உள்ள டிக்கெட்டுக்கள் கரும பீடங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.
எனவே, போட்டி டிக்கெட்டுகளை கோரி ‘டிக்கெட் கருமபீடங்களுக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவிக்க விரும்புகிறது.
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் T20 ஆட்டத்தை பார்வையிடுவதற்காக தம்புள்ளை ரங்கிரி மைதானத்திற்கு 18,000 இரசிகர்கள் வருகை தந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறியுள்ளது.