Home » இந்திய வீடமைப்புத்திட்டத்தில் குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்

இந்திய வீடமைப்புத்திட்டத்தில் குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்

- அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார்கள் சங்கம் கோரிக்கை

by Prashahini
February 18, 2024 3:04 pm 0 comment

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட இருக்கின்ற 10 ,000 வீடமைப்புத்திட்டத்தில் மலையக இந்து குருமார்களுக்கு நாட்டில் வீடில்லாத குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார்கள் சங்கத்தின் ஸ்தாபகர் சிவஸ்ரீ எஸ்.ஸ்கந்தராஜா குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார்கள் சங்கத்தின் பொது கூட்டம் இன்று (18 )கொட்டகலை முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். மலையக பகுதியில் வாழும் பெரும்பாலான குருமார்களுக்கு வீடுகள் இல்லை. தோட்டங்களில் சிறிய அறையில் தான் அவர்களின் குடும்பமே வாழ்கிறது. இவ்வாறு வாழ்ந்து வரும் குருமார்கள் இறந்தால் கூட அவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை தான் காணப்படுகின்றது. இந்த நாட்டில் ஏனைய சமயத்தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ,சலுகைகள் இந்து குருமார்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்தை பெறும் இவர்களால் தனக்கென ஒரு வீடு நிர்மானித்துக்கொள்ளவும் முடியாது. அதற்கான காணி வசதியோ பொருளாதாரமோ பெரும்பாலான குருமார்களிடம் இல்லை.

ஆகவே, இந்திய வீடமைப்பு திட்டத்தில் 1000 வீடுகளையாவது வீடுகள் இல்லாத குருமார்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டும். அதே நேரம் கொட்டகலை பகுதியில் ஸ்ரீ வித்யா என்ற சைவ பாடசாலையினை ஆரம்பித்து சமயம்,வேதம் ,தேவார திருமுறைகள்,ஜோதிடம் உள்ளிட்ட விடயங்களை குருமார்களுக்கு இலவசமாக கற்பித்து வருகிறோம். இதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்நிலையில் இந்த பாடசாலையினை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினையும் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் சமய பணிகள் மாத்திரம் அல்லாது பல சமூக பணிகளையும் முன்னெடுத்துள்ளோம். தற்போது இந்த சங்கம் உருவாக்கப்பட்டு 10 வருட நிறைவினை எட்டியுள்ளது.

ஆகவே, இதில் குருமார்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு அதனை அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்க உள்ளோம் .

இன்று அரசாங்கம் நிகழ்நிலை சட்ட மூலத்தினை கொண்டு வந்துள்ளது. இது பொது மக்களுக்கு செய்திகள் சென்றடைவதில் பெரும் தடையாகவே காணப்படுகின்றது. நிகழ்நிலை சட்ட மூலம் இனவாதத்திற்கு எதிராகவே, அல்லது மதவாதத்திற்கு எதிராகவே செயற்படுபவர்களுக்காக சட்டமூலம் கொண்டு வந்தால் அதனை நாங்கள் வரவேற்போம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

அவர் இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. இன்றைய சூழ்நிலையில் குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு சாப்பிடுவதற்கு 3000 ரூபாவாவது தேவைப்படும் நிலை உள்ளது. ஆகவே தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் குறைந்த பட்சம் அடிப்படை சம்பளமாக 2000 ரூபாவாவது பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கு அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் நாங்கள் அதற்கும் ஒத்துழைப்போம். அது மாத்திரமின்றி ஏனைய சமங்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் சலுகைகள் பெற்றுக்கொள்ள நாட்டில் அனைத்து குருமார்களின் சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT